இந்தியா

பிகார் படகு விபத்து: பலி 24-ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்

DIN

பிகார் மாநிலம் பாட்னா அருகே சனிக்கிழமை நேரிட்ட படகு விபத்தில் பலியானோரது எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் பலியானோருக்கு பிரதமர் நரேந்திர மோடி, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
சபல்பூரில் மகா சங்கராந்தியை முன்னிட்டு நடைபெற்ற காற்றாடி விடும் விழாவை கண்டு ரசித்து விட்டு, கங்கை நதியில் படகு மூலம் 40 பேர் பாட்னாவில் உள்ள ரானிகட்டுக்கு சனிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு சுழலில் சிக்கி கவிழ்ந்தது.
இதில் 40 பேரும் நீரில் மூழ்கினர். அவர்களில் சிலர் மட்டும் நீந்தி கரையேறினர். இந்த விபத்து குறித்த தகவலின்பேரில் மீட்புப் படையினர் விரைந்து வந்து, நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 20 பேரின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டன. மேலும் 4 பேரின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன. எஞ்சியவர்களைத் தேடும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உயர் நிலை விசாரணைக்கு உத்தரவு: படகு விபத்துக்கு அதிக அளவு ஆட்களை அதில் ஏற்றிச் சென்றதே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து உயர் நிலை விசாரணைக்கு முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். தவறிழைத்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
படகு விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதற்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தோர் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கும்படி அவர் உத்தரவிட்டுள்ளார். படகு விபத்தின் காரணமாக, பிகாரில் சனிக்கிழமை நடைபெறவிருந்த அரசு விழாக்கள் ரத்து செய்யப்பட்டன.
பாட்னா படகு விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிகார் தலைநகர் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை காணொலியின் மூலம் தொடங்கி வைக்கப்பட இருந்த திட்டத்தையும் பிரதமர் மோடி ஒத்தி வைத்துவிட்டார்.
வழக்குப்பதிவு: படகு விபத்து சம்பவம் தொடர்பாக சோனேபூர் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT