இந்தியா

பிஎஸ்எஃப் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகள்: அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

DIN

எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுக்கு எத்தகைய உணவுகள் வழங்கப்படுகின்றன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிஎஸ்எஃப், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை, எல்லைக் காவல் ஆயுதப் படை (எஸ்எஸ்பி) உள்ளிட்ட படைப் பிரிவுகளின் கருத்துகளைக் கேட்டு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேஜ் பகதூர் யாதவ் என்ற பிஎஸ்எஃப் படை வீரர், அண்மையில் சமூக வலைதளங்களில் ஒரு விடியோ காட்சியை வெளியிட்டார். எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற வகையில் இருப்பதாக அந்த விடியோவில் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பூரண் சந்த் ஆர்யா என்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
நாடு முழுவதும் உள்ள துணை ராணுவப் படையினருக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகின்றன? அவை எவ்வாறு தயார் செய்யப்படுகின்றன? அவற்றுக்கு எத்தகைய பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன? என்பன குறித்த விவரங்களை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், துணை ராணுவப் படை நிர்வாகத்துக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அதில் பூரண் சந்த் ஆர்யா கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், அந்த மனு, தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி.ரோகிணி, நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் மற்றும் பிஎஸ்எஃப் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், அதன் பிறகு கூறியதாவது:
பிஎஸ்எஃப் வீரர்களுக்கு எத்தகைய உணவு வழங்கப்படுகிறது என்பது குறித்த அறிக்கையை அடுத்த விசாரணையின்போது சமர்ப்பிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோன்று, இந்தக் குற்றச்சாட்டு குறித்து பிற துணை ராணுவப் படைகள் மற்றும் எல்லைக் காவல் படைகளின் கருத்தை அறிவது அவசியமாகிறது. அதற்காக அந்தப் படைப் பிரிவுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT