இந்தியா

துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைவர்களிடம் ஆதரவு கோரினார் பிரதமர் மோடி

DIN

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுக்கு ஆதரவளிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிகார் முதல்வர் நிதீஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களிடம் பிரதமர் மோடி கோரினார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மகாத்மா காந்தி மற்றும் ராஜாஜியின் பேரனும் மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநருமான கோபால கிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டார். மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்டார். இரு வேட்பாளர்களும் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிகார் முதல்வர் நிதீஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வெங்கய்ய நாயுடுவுக்கு ஆதரவு அளிக்குமாறு அவர்களிடம் பிரதமர் கேட்டுக் கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சந்திரபாபு நாயுடு வாழ்த்து: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடுவைத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் '
வெங்கய்ய நாயுடுவின் நீண்ட அரசியல் அனுபவத்தை மனதில் கொண்டு பார்க்கும்போது அவர் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முற்றிலும் தகுதியானவர் என்பது தெளிவாகும். அவரது வாழ்த்து தெரிவிக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவு: இதனிடையே, வெங்கய்ய நாயுடுவுக்கு ஆதரவு கோருவதற்காக தெலங்கான முதல்வரும், டிஆர்எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவை பிரதமர் மோடி தொடர்பு கொண்டார். அதைத் தொடர்ந்து வெங்கய்ய நாயுடுவை ஆதரிக்குமாறு கட்சி தன் எம்.பி.க்களை ராவ் கேட்டுக் கொண்டார். இத்தகவலை டிஆர்எஸ் கட்சி எம்.பி.யான வினோத் குமார் தெரிவித்தார்.
தவிர, வெங்கய்ய நாயுடுவை தங்கள் வேட்பாளராகத் தேர்வு செய்துள்ளது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்குத் தகவல் தெரிவிப்பதற்காக அவரை அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, 'ஆந்திரத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் வெங்கய்ய நாயுடுவை எங்கள் கட்சி நிச்சயமாக ஆதரிக்கும்' என்று ஜெகன்மோகன் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT