இந்தியா

கேரள நடிகை கடத்தல் வழக்கு திலீப்பின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

DIN

கேரள நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் 20-ஆம் தேதிக்கு கேரள உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
பிரபல கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப்பை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருக்கும் பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
திலீப்பின் உத்தரவின்பேரிலேயே இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியிருப்பதாக குற்றம்சாட்டிய போலீஸார், அவர் மீது கடத்தல் சதி, பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
இதனிடையே, தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நடிகர் திலீப், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அங்கமாலி மாவட்ட நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை அங்கமாலி நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும், அவரது போலீஸ் காவலை வரும் 25-ஆம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டது.
இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் நடிகர் திலீப் சார்பில் திங்கள்கிழமை புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி சுதீந்திர குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது திலீப் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடுகையில், 'திலீப்புக்கும், இந்தக் கடத்தலுக்கு தொடர்பு இல்லை. இந்த வழக்கில் வேண்டுமென்றே அவர் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்' எனக் கூறினார்.
ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்த அரசு தரப்பு வழக்குரைஞர், இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் போலீஸ் தரப்பு சாட்சியங்களைக் கலைத்துவிடுவார் என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திலீப்பின் ஜாமீன் மனு மீதான விசாரணை, வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.
அப்போது, அன்றைய தினம் அவரது மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்றும் திலீப்பின் வழக்குரைஞர் கோரிக்கை விடுத்தார். ஆனால், இதனை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT