செயல்படாத 24 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: பணியாளர் நலத்துறை அதிரடி தகவல்
சரியாக செயல்படாத ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மீது மத்தியப் பணியாளர் நலத்துறை அதிரடி
புதுதில்லி: சரியாக செயல்படாத ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மீது மத்தியப் பணியாளர் நலத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
‘புதிய இந்தியாவுக்கான அடித்தளம்’ என்ற பெயரின் கீழ் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கடந்த மூன்றாண்டு நடவடிக்கை குறித்து ஓர் ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டது. பிரதமர் மோடியிடம் அளிக்கப்படவேண்டிய இந்த ஆய்வறிக்கையை மத்தியப் பணியாளர் நலத்துறை அமைச்சகம் தயாரித்தது. இது தொடர்பான விரிவான விளக்கக் கையேடு, தற்போது பிரதமர் மோடியிடம் சமர்ப்பிக்கப்பட்டு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது
அந்த கையேட்டு அறிக்கையில், ‘நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளில் பணியாற்றும் அதிகாரிகள் 381 மீது ஊழல், பணியில் செயலின்மை போன்ற காரணங்களுக்காக, மத்தியப் பணியாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, நாடு முழுவதும் பணியாற்றிவரும் 2,953 ஐஏஎஸ், ஐபிஎஸ்., ஐஎஃப்எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 11,828 ஏ பிரிவு அதிகாரிகள், 19,714 பி பிரிவு அதிகாரிகளின் பதிவேடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதில், சரியாக செயல்படாத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மத்திய உயர் பணியில் உள்ள 25 ‘ஏ’ பிரிவு அதிகாரிகளுக்கும் 99 ‘பி’ பிரிவு அதிகாரிகளுக்கும் ஓய்வுக் காலத்துக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 37 ‘ஏ’ பிரிவு அதிகாரிகளுக்கு ஓய்வு ஊதியம் ரத்துசெய்யப்பட்டு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. 10 ஐஏஎஸ் உள்பட 21 அதிகாரிகள் ராஜிநாமா செய்துள்ளனர். தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகள் மீதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 8 ஐஏஎஸ் உள்பட 199 ஏ பிரிவு அதிகாரிகளின் ஊதியத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. பணியிலிருந்து தவறுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.