இந்தியா

சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: பிரகாஷ் ஜவடேகர்

DIN

புதுதில்லி: சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டண விபரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவுறுத்தியுள்ளது.

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து சிபிஎஸ்இ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சிபிஎஸ்சி பள்ளிகள் பெற்றோரிடமிருந்து அதிகப்படியான கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும், மறைமுகமாக எந்தவித கட்டணங்களும் வசூல் செய்யப்படக் கூடாது என்றும் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், கட்டண விவகாரத்தில் பள்ளிகள் கண்காணிக்கப்படுவதாகவும், தேவையற்ற மற்றும் மறைமுக கட்டணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டண விபரங்களை சிபிஎஸ்இ கேட்டுள்ளது. அந்த விபரங்களைச் சமர்ப்பிக்காத பள்ளிகளுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

கல்வித் துறையில் தனியார் முதலீட்டை நாங்கள் வரவேற்கிறோம். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். ஆனால், கூடுதல் கட்டணங்கள் தனியார் பள்ளிகளால் வசூலிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றார்.

தனியார் பள்ளிகளில் சீருடைகள் விற்பது கூடாது என்று சமீபத்தில் சிபிஎஸ்இ எச்சரித்த நிலையில், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை கட்டணம் மற்றும் அண்மை ஆண்டுகளில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் குறித்த விவரங்களை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் ஜவடேகர் தெரிவித்தார்.

சீருடை மற்றும் புத்தகங்களை பள்ளிகளில் தான் வாங்க வேண்டும் என்று பெற்றோர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ அண்மையில் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT