இந்தியா

ரயில் பயணிகள் கட்டணம் உயருமா? அமைச்சர் சுரேஷ் பிரபு பதில்

DIN

""ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ரயில்வே மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்யும்'' என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தற்போது ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களுக்காக மாநில அரசுகளுடனான கூட்டு முயற்சிகள், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து (எல்ஐசி) பெறப்பட்ட கடன் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நிதி திரட்டப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ரயில்வே துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடமிருந்து ரூ. 35 ஆயிரம் கோடி நிதியுதவி பெறப்பட உள்ளது.
நாட்டில் ஒரேயொரு ரயில் விபத்துகூட ஏற்படாதவண்ணம், பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ரூ. 5,000 கோடியை ரயில்வே துறை திரட்ட வேண்டியுள்ளது.
இந்த திட்டங்களுக்காக, இதுவரை மத்திய சாலை நிதியத்தின் மூலம் ரயில்வே துறைக்கு ரூ. 10,000 கோடி நிதி கிடைத்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் மூலம் ரூ. 5,000 கோடி நிதி கிடைத்துள்ளது.
பாதுகாப்பு நிதியத்துக்கான ரூ. 5,000 கோடியை வேறு வழிகளில் திரட்ட வேண்டியுள்ளது. இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம்.
ரயில்வே துறையை பெரிய அளவில் விரிவுபடுத்துவதற்காக கடந்த 2014 முதல் 2019 வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ. 8.5 லட்சம் கோடியை மத்திய அரசு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்துள்ளது.
பயணிகள் கட்டணம் உயருமா?: புதிகாக ரயில்வே மேம்பாட்டு ஆணையத்தை (ஆர்டிஏ) அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆணையத்துக்கான தலைவர், பிற உறுப்பினர் பதவிகளுக்கான நியமனங்களைச் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில்வே மேம்பாட்டு ஆணையம் செயல்பாட்டுக்கு வந்த பின், ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அந்த ஆணையம் முடிவு செய்யும். முதலில், இதுதொடர்பான பரிந்துரைகளை ஆணையம் அளிக்கும். பின்னர், ரயில்வே அமைச்சகத்துடன் கலந்து பேசி கட்டண உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ரயில்வே துறை பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேம்படுத்தப்பட்ட வசதிகள்: விரைவில், சுமார் 40,000 ரயில் பெட்டிகளில் வசதியான இருக்கைகள், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத கழிப்பறைகள், மாற்றியமைக்கப்பட்ட உட்பகுதிகள், செல்லிடப்பேசிகளை சார்ஜ் செய்யும் பகுதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன என்றார் சுரேஷ் பிரபு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT