இந்தியா

பன்முகத்தன்மையை சீர்குலைக்கச் சதி: மோடி அரசு மீது சோனியா குற்றச்சாட்டு

DIN

நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சதி செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் காரியக் கமிட்டியின் கூட்டம் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்களான குலாம் நபி ஆஸாத், ப.சிதம்பரம், அம்பிகா சோனி, ஜனார்த்தன் துவிவேதி மற்றும் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டின் நடப்பு அரசியல் நிலவரம் குறித்தும், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு விரைவில் நடைபெற உள்ள தேர்தல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உள்கட்சித் தேர்தல் அட்டவணைக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒப்புதல் அளித்தது.
இறைச்சிக்காக கால்நடைகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடை உள்ளிட்ட சிக்கலான விவகாரங்கள் குறித்து விவாதம் நிகழ்ந்து வரும் நிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:
நாட்டில் தற்போது மக்களைப் பிளவுபடுத்தக் கூடிய பிரச்னைகள் எழுப்பப்படுகின்றன. பல்வேறு மதச் சித்தாந்தங்கள் மற்றும் நம்பிக்கைகளைப் பின்பற்றுவோரின் வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பழக்கங்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது.
பொருளாதார வளம் நிறைந்திருந்த நாட்டில் தற்போது தேக்க நிலைதான் காணப்படுகிறது. பன்முகத்தன்மை செழித்தோங்கிய நாட்டை தற்போது குறுகிய கண்ணோட்டத்துக்குள் அடைக்கும் முயற்சி நடைபெறுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க மத்திய அரசு சதி செய்கிறது. பன்முகத்தன்மையைக் காப்பாற்ற நாம் தயாராக இருக்க வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்திய அரசின் மிகப்பெரிய தோல்விதான் காரணம். நிலைமையை மத்திய, மாநில அரசுகள் அக்கறையின்றி கையாண்டு வருவது, உள்ளூர் மக்களை - குறிப்பாக இளைஞர்களை அன்னியப்படுத்தவும், பகைவர்களாக்கவும் செய்கிறது.
மக்களைப் பிளவுபடுத்தும் செயல்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. இது இத்தனை ஆண்டுகளாக உருவாகியிருந்த நல்லெண்ணத்தையும் முன்னேற்றத்தையும் பாதிக்கிறது.
கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்றும் காங்கிரஸால் ஆட்சியமைக்க இயலவில்லை. இவ்வாறு மீண்டும் நடைபெறுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. கட்சி அமைப்பை வலுப்படுத்த கட்சியினர் அனைவரும் உதவ வேண்டும்.
அரசியல்வாதிகள், அமைப்புகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகம் என அனைத்திலும் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. சட்டத்தை மதிக்காத வகையில், மாறுபட்ட குரல்களை ஒடுக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு எடுத்த ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையானது முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது.
இந்த நடவடிக்கை, நாட்டின் வளர்ச்சியை பாதித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் காரணமாக பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்படும் என்பதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்கூட்டியே கணித்துக் கூறினார். அவரது கணிப்பு சரியானதுதான் என்பதை மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதங்கள் நிரூபித்துள்ளன என்றார் சோனியா காந்தி.
மன்மோகன் சிங் தாக்கு: காரியக் கமிட்டி கூட்டத்தில் மன்மோகன் சிங் பேசுகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சரிந்ததற்கு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையே முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டார். "தனியார் துறை முதலீடுகள் சரிந்து விட்டன. அரசு நிதி ஒதுக்கீடு என்ற ஒற்றை என்ஜின் மூலம் பொருளாதாரம் ஓடிக் கொண்டிருக்கிறது. நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது' என்று அவர் குறிப்பிட்டார்.
அதிகார துஷ்பிரயோகம்-ஆஸாத்: கூட்டத்தில் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் பேசும்போது, "என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராயின் இல்லத்தில் சிபிஐ சோதனை நடந்துள்ளது. சிலர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயுடன் மாயமாகி விடும்போது, ரூ.50 கோடி விவகாரம் குறித்து அரசு ஏன் இப்படிப் பதறுகிறது? அதிருப்திக் குரல்களை ஒடுக்கவும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவும் அரசு நிர்வாகத்தை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது' என்று தெரிவித்தார்.
ராகுல் கருத்து: காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்துக்குப் பின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவில், "ஜம்மு-காஷ்மீர் பிரச்னை, பொருளாதாரத்தை அரசு தவறாகக் கையாள்வது, குடியரசுத் தலைவர் தேர்தல் உள்ளிட்ட முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்தும், காங்கிரஸ் உள்கட்சித் தேர்தல் குறித்தும் விவாதித்தோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT