முகப்பு
இந்தியா

நீதிபதி கர்ணன் மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் மறுப்பு

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விதித்துள்ள சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு

இந்தியா

நீதிபதி கர்ணன் மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் மறுப்பு

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விதித்துள்ள சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:42 PM
பகிர்:

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விதித்துள்ள சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் விடுமுறைக் கால வழக்குகளை விசாரிக்கும் இரண்டு நீதிபதிகள் அமர்வு மறுத்து விட்டது.

இரு மனுக்கள்: இது தொடர்பாக நீதிபதி கர்ணன் சார்பில் இரண்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஒரு மனுவில், "நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. மற்றொரு மனுவில், "அரசியல் சாசன பொறுப்பை வகிக்கும் நீதிபதி கர்ணன் மீது தன்னிச்சையாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை. இந்த விஷயத்தில் அவர் மீது நாடாளுமன்றம் மூலமே விசாரணையோ நடவடிக்கையோ எடுக்க முடியும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்திற்கு தற்போது கோடை விடுமுறை என்பதால், முக்கிய வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக நீதிபதிகள் அசோக் பூஷண், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமித்துள்ளார். இந்த அமர்வு முன் நீதிபதி கர்ணன் சார்பில் அவரது வழக்குரைஞர் மாத்யூஸ் ஜே.நெடும்பரா புதன்கிழமை ஆஜராகி, நீதிபதி கர்ணன் விவகாரம் தொடர்புடைய இரண்டு மனுக்களையும் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நீதிபதிகள் மறுப்பு: அப்போது நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி கடந்த மே 9-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் தலையிட எங்கள் அமர்வுக்கு அதிகாரம் கிடையாது. எனவே, எங்களால் நீதிபதி கர்ணனின் மனுக்களை விசாரித்து நிவாரணம் வழங்க முடியாது' என்றனர்.
இதையடுத்து, வழக்குரைஞர் மாத்யூஸ் நெடும்பரா "இந்த மனுக்களை விசாரிக்கக் கோரவில்லை. நீதிபதி கர்ணனுக்கு எதிரான கைது உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும் அவரது கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என்று இரண்டு நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
பின்னணி: சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி கர்ணன் மாற்றப்பட்டார். இதையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் மீது அவர் ஊழல் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக சுமத்தினார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உத்தரவின்படி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி ஆஜரான நீதிபதி கர்ணன், தமது குற்றச்சாட்டில் உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார். இதனால், அவரை மன நல பரிசோதனைக்கு உள்படுத்தி அதன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மேற்கு வங்க மாநிலக் காவல் துறை தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு உடன்பட நீதிபதி கர்ணன் மறுத்தார்.
அவரது இந்த செயலை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி அவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விதித்தது. இதையடுத்து, நீதிபதி கர்ணன் தலைமறைவானார். அவரைத் தேடி சென்னைக்கு வந்த மேற்கு வங்க காவல் தனிப் படையின் முயற்சி பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில், தனது சார்பில் இரண்டு மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் தரப்பு தாக்கல் செய்துள்ளது. இதே விவகாரத்தில் ஏற்கெனவே மூன்று முறை நீதிபதி கர்ணன் தரப்பு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. தற்போது நான்காவது முறையாக அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →