இந்தியா

பாஜக கூட்டணியில் நிதீஷ் இணைய வேண்டும்: பாஸ்வான் வலியுறுத்தல்

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆதரவு அளித்திருப்பதை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பாராட்டியுள்ளார்.

நிதீஷ் குமார் விரைவில் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இடம்பெற்றுள்ளது. இந்தக் கட்சியின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி,
பிகார் தலைநகர் பாட்னாவில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராம்விலாஸ் பாஸ்வான் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார் கூட்டணி வைத்துள்ளபோதிலும், குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்திருக்கிறார். மேலும், தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தி விட்டார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமார் தோல்வியடைந்துவிடுவார் என்பதைத் தெரிந்துகொண்டு வேண்டுமென்றே அவரை எதிர்க்கட்சிகள் களமிறக்கியுள்ளன என்று நிதீஷ் குமார் சரியாக சுட்டிக் காட்டினார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் மீரா குமாரின் பெயர் நினைவுக்கு வரவில்லையா? தேசிய ஜனநாயகக் கூட்டணி ராம்நாத் கோவிந்தின் பெயரை அறிவித்த பிறகே, எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமார் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
எனவே, நிதீஷ் குமார் இரு படகுகளில் சவாரி செய்ய வேண்டாம். அவர் விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும். அவ்வாறு இணைவது, கூட்டணிக்கு வலுசேர்க்கும்; பிகார் மாநிலத்துக்கும் நல்லது என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: ஹாஸ்டல் கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

SCROLL FOR NEXT