இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு படிகள் மாற்றியமைப்பு

DIN

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டுவாடகைப் படி உள்ளிட்டவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக ரூ.30,748 கோடி செலவு: இந்த படிகள் உயர்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.30,748 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஊதியக் குழு பரிந்துரையை அப்படியே அமல்படுத்தினால் மத்திய அரசுக்கு ரூ.29,300 கோடி மட்டுமே கூடுதல் செலவாகும். ஆனால், பல படிகளை மத்திய அரசு தாமாக முன்வந்து அதிகரித்துள்ளதால் ரூ.1,448 கோடி வரை செலவு அதிகரித்துள்ளது.
மொத்தம் 53 வகையான படிகளை நிறுத்த வேண்டுமென்று ஊதியக் குழு பரிந்துரைத்தது. ஆனால், அவற்றில் 12 படிகளை தொடர்ந்து வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ரயில்வே, அஞ்சல் துறை, பாதுகாப்பு, அறிவியல் ஆய்வுத் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் பயனடைவர்.
படிகளை மாற்றி அமைப்பது தொடர்பாக ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை ஆய்வு செய்ய அதிகாரமளிக்கப்பட்ட குழுவை மத்திய அரசு நியமித்தது. அந்தக் குழு அளித்த அறிக்கையை ஏற்று புதிய படி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதனைத் தெரிவித்தார்.
34 மாற்றங்களுடன்... படிகள் உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்களும், ராணுவத்தில் பணியாற்றுபவர்களும் பயனடைவார்கள். 7-ஆவது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளில் 34 மாற்றங்களை மேற்கொண்டு மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
ஓராண்டுக்குப் பிறகு... 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு, இப்போது படிகளின் விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி வீட்டுவாடகைப் படி ஊழியர்கள் வசிக்கும் நகரங்களுக்கு ஏற்ப 24 சதவீதம், 16 சதவீதம், 8 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.
ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி முன்பு இருந்ததை விட வீட்டு வாடகைப்படி சதவீதம் சற்று குறைக்கப்பட்டுள்ளது என்றாலும், ஊழியர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வீட்டுவாடகைப் படி என்பது இனி ரூ.5,400, ரூ.3,600, ரூ.1,800 என்ற அளவுக்கு குறையாமல் இருக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் படிகளில் வீட்டு வாடகைப் படியின் பங்களிப்பு மட்டும் 60 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ வீரர்களுக்கான உயர்வு: சியாச்சின் பகுதியில் பணிபுரியும் 9}ஆவது நிலை ராணுவ வீரர்களுக்கான சியாச்சின் படி மாதம் ரூ.31,500 வழங்க வேண்டுமென்று ஊதியக் குழு பரிந்துரைத்தது. ஆனால், அதை மாதம் ரூ.42,500}ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
8}ஆம் நிலை வரையிலான ராணுவ வீரர்களுக்கு மாதம் ரூ.21,000 படி வழங்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ரூ.30,000 வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கான நிரந்தர மருத்துவப்படி ரூ.500- என பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு இருமடங்காக உயர்த்தி ரூ.1000 வழங்க முடிவெடித்துள்ளது.
நக்ஸல் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் பணியாற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு வழங்கப்படும் படி ரூ.8,400 முதல் ரூ.16,800 என்ற அளவில் இருந்து ரூ.17,300 முதல் ரூ.25,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பான வருகைப் பதிவுக்கு வழங்கப்படும் படி ரூ.4,500-இல் இருந்து ரூ.6,750-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு செவிலியர்களுக்கான செவிலியர் படி ரூ.4,800-ல் இருந்து ரூ.7,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சை அறையில் பணியாற்றுவதற்காக வழங்கப்படும் படி மாதம் ரூ.360-இல் இருந்து ரூ.540-ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் சீருடை உள்ளிட்டவற்றை பராமரிக்க வழங்கப்பட்டு வந்த பல்வேறு வகையான படிகள் முறைப்படுத்தப்பட்டு ஒரே படியாக மாற்றப்பட்டுள்ளது.

ஏர்-இந்தியா பங்குகளை விற்க ஒப்புதல்

பொதுத் துறை நிறுவனமான ஏர்-இந்தியாவில் மத்திய அரசின் பங்குகளை விலக்கிக் கொள்வது என்று, அதாவது ஏர்-இந்தியாவில் தனியார் பங்களிப்பை அனுமதிப்பதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.52,000 கோடி கடனில் செயல்படும் ஏர் இந்தியா நிறுவனத்தில் தனியார் பங்களிப்பை அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு நீதி ஆயோக் ஏற்கெனவே ஆலோசனை வழங்கியிருந்தது. டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸýடன் இணைந்து ஏர் இந்தியாவை வாங்கத் தயாராக இருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.
உத்தரப் பிரதேசத்தில் ரூ.3,691 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

முன்னாள் காங்கிரஸ் நிா்வாகி, ஹிந்தி நடிகா் பாஜகவில் இணைந்தனா்

கோப்பு மகா மாரியம்மன் கோயில் திருவிழா

அரசுப் பேருந்து மோதி கோயில் பூசாரி உயிரிழப்பு

கோளரங்கில் பள்ளி மாணவா்களுக்கான கோடைகால அறிவியல் பயிற்சி முகாம்: மே 21 இல் தொடக்கம்

SCROLL FOR NEXT