மூத்த குடிமக்களுக்கு இலவச சக்கர நாற்காலிகள்: மத்திய அரசு திட்டம்
வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மூத்த குடிமக்களுக்கு காதுகேட்கும் கருவிகள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களை இலவசமாக வழங்குவதற்கான புதிய திட்டத்தை மத்திய அரசு அடுத்த வாரம் அறிமுகப்படுத்தவிருக்கிற
வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மூத்த குடிமக்களுக்கு காதுகேட்கும் கருவிகள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களை இலவசமாக வழங்குவதற்கான புதிய திட்டத்தை மத்திய அரசு அடுத்த வாரம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இதுகுறித்து மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களுக்கு, வயோதிகம் காரணமாக ஏற்படும் குறைபாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கான பொருள்களை இலவசமாக வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு அடுத்த வாரம் அறிமுகப்படுத்துகிறது.
ரூ.477 கோடி செலவிலான இந்தத் திட்டத்துக்கு "ராஷ்ட்ரீய வயோஸ்ரீ யோஜனா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கான முகாமை, மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடு ஆகியோர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் வரும் 25-ஆம் தேதி தொடங்கி வைக்கின்றனர்.
இதேபோன்ற மற்றொரு முகாம், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த இரு முகாம்களிலும், தலா 2,000 மூத்த குடிமக்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் இரு மாவட்டங்களில் இதுபோன்ற முகாம்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாடு, கேட்கும் திறனில் குறைபாடு, நடப்பதில் சிரமம், பற்கள் விழுதல் போன்ற பல்வேறு பிரச்னைகளை முதியவர்கள் சமாளிக்க உதவியாக அவர்களுக்கு கைத்தடிகள், ஊன்றுகோல்கள், சக்கர நாற்காலிகள், மூக்குக் கண்ணாடிகள், காது கேட்கும் கருவிகள், செயற்கைப் பற்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் பொருள்களைப் பெறுபவர்கள், 60 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அத்துடன், அவர் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர் என்பதற்கான சான்றும் அளிக்கப்பட வேண்டும் என்று அந்த அமைச்சரக வட்டாரங்கள் தெரிவித்தன.