முகப்பு
இந்தியா

குஜராத் கடற்பகுதியில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 100 பேர் கைது

குஜராத் கடற்பகுதியில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:19 AM
பகிர்:

குஜராத் கடற்பகுதியில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது.
இதுகுறித்து குஜராத் மாநிலம், ஆமதாபாதில் தேசிய மீன்பிடித் தொழிலாளர்களின் சங்கம் செயலாளர் மணீஷ் லோதாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்திலுள்ள ஜகாவ் கடற்பகுதியில் மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்தப் பகுதி சர்வதேச எல்லை அருகே உள்ளது.
இந்நிலையில், அந்தப் பகுதிக்கு வந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினர், இந்திய மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்று விட்டனர். அப்போது மீனவர்களுக்குச் சொந்தமான 18 மீன்பிடி படகுகளையும் பாகிஸ்தான் படையினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுவிட்டனர்.
பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில் இருந்து தப்பிவந்த மீனவர்கள், எங்களிடம் இதுகுறித்த தகவலை அளித்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினரை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை கேட்கும் முயற்சியில் எங்களது சங்கம் ஈடுபட்டுள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்திலும் இந்திய மீனவர்கள் 115 பேரை பாகிஸ்தான் கைது செய்தது. மீனவர்களின் 19 படகுகளையும் எடுத்துச் சென்றது. மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரையில், 225 மீனவர்களை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது. சுமார் 40 படகுகளை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளது என்றார் லோதாரி.
கட்ச் பகுதியில் மீன்பிடித்த பாகிஸ்தான் மீனவர்கள் 9 பேரை இந்திய கடலோர பாதுகாப்புப் படை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தது. இதேபோல், கடந்த மாதமும் இதே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த 4 பாகிஸ்தான் படகுகளை இந்திய கடலோர பாதுகாப்புப் படை பறிமுதல் செய்தது.

முழு கட்டுரையைப் படிக்க →