இந்தியா

நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவப் பரிசோதனை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

DIN

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் உச்ச நீதிமன்றத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், தனது பணியிட மாற்றத்துக்கு கர்ணன் தானே தடைவிதித்துக் கொண்டார். இதையடுத்து, அவருக்கு வழக்குகளை ஒதுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
"நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் குறிவைக்கப்படுகிறேன்' என்று கூறிய நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்றத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்து நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
இதையடுத்து, நீதிபதி கர்ணன் கடந்த மார்ச் 31-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அப்போது, அவர் பதிலளிக்க 4 வாரம் அவகாசம் அளித்த உச்ச நீதிமன்றம், அவர் நீதிமன்றப் பணிகளில் ஈடுபடக் கூடாது என்று விதித்த தடையை திரும்பப் பெற மறுத்துவிட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, "கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு வரும் 4-ஆம் தேதி மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும். இதற்கான மருத்துவர்கள் குழுவை கொல்கத்தா அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். நீதிபதிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவர்கள் குழுவுக்கு உதவ காவல் துறை அதிகாரிகளை மேற்கு வங்க காவல் துறைத் தலைவர் நியமிக்க வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், "தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மே 8-ஆம் தேதிக்குள் நீதிபதி கர்ணன் பதிலளிக்க வேண்டியுள்ளது. அவர் பதிலளிக்காவிட்டால் இதில் அவர் கூறுவதற்கு ஒன்றும் இல்லை' எனக் கருதப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அதற்கு முன்னதாகவே நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் வரும் ஜூன் மாதம் பணியில் இருந்து ஓய்வுபெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி கர்ணன் மீண்டும் குற்றச்சாட்டு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊழல் கறை படிந்தவர்கள் என்று நீதிபதி சி.எஸ். கர்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
தனக்கு மனநலப் பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னைத் தொடர்ந்து குறிவைக்கின்றனர். இப்போதும், ஊழல் நீதிபதிகள் எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நான் எந்த மருத்துவப் பரிசோதனைக்கும் இணங்கப்போவது இல்லை. என்னை கட்டாயப்படுத்தி மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தினால், மேற்கு வங்க காவல் துறை தலைவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுவேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT