இந்தியா

மாறன் சகோதரர்கள் விடுவிப்பை எதிர்த்து அமலாக்கத் துறை மேல் முறையீடு: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு

DIN

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்புடைய வழக்கில் இருந்து முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழும நிறுவனங்கள் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள ஏர்செல் நிறுவனப் பங்குகளை வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்ததாக மத்திய அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், கலாநிதி மாறனின் மனைவி காவேரி, தெற்கு ஆசியா எஃப்.எம். நிறுவன மேலாண்மை இயக்குநர் கே.சண்முகம் ஆகியோரும் தெற்கு ஆசிய எஃப்.எம். நிறுவனம், சன் டைரக்ட் டிவி நிறுவனம் ஆகியவற்றின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில், தங்கள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டோர் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர், மத்திய அமலாக்கத் துறை தரப்பு விசாரணை முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி பிறப்பித்த உத்தரவில், 'ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய முகாந்திரமோ, உரிய ஆதாரங்களோ இல்லை. எனவே, அவர்களை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கிறேன்' என்று குறிப்பிட்டார்.
இதேபோல மாறன் சகோதர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ தொடுத்த வழக்கில் இருந்தும் அவர்கள் சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அமலாக்கத் துறை சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தம் விவகாரத்தில் விதிகளை மீறி கோடிக் கணக்கில் நடந்துள்ள பணப் பரிவர்த்தனையை மறுக்க முடியாது. இந்தியாவில் தனது துணை நிறுவனங்கள் மூலம் மேக்சிஸ் நிறுவனம் முதலீடுகள் செய்துள்ளது. இது தொடர்பான விதிமீறல்களை அமலாக்கத் துறை விசாரித்துள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்தாலும் உள்நாட்டில் மாறன் சகோதரர்கள் தொடர்புடைய நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ளதை ஒதுக்கிவிட முடியாது. இந்த அம்சங்களை சிபிஐ நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் மாறன் சகோதரர்களை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்துள்ளது. எனவே, அவர்களை மீண்டும் இந்த வழக்கில் சேர்த்து விசாரணையைத் தொடர்வதற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT