இந்தியா

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு பின்னடைவு

DIN

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவருடைய மகன் ராகுல் காந்தி தொடர்புடைய நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் வருமான வரித் துறையின் விசாரணைக்கு தடை விதிக்க தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் முறைகேடான வகையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் தாய் நிறுவனமான அசாசியேட்டட் ஜர்னல்ஸின் சொத்துகளை கையகப்படுத்திவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2012-இல் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விவரம்: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட்டு வந்த "அசாசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' என்னும் நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 90.25 கோடி கடன் பாக்கி வைத்திருந்தது. எனினும், அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ. 2,000 கோடிக்கு மேல் இருக்கும்.
இந்நிலையில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் "யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட்' என்னும் நிறுவனம் ரூ. 50 லட்சத்தை செலுத்தி அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்தியது.
இந்த நிறுவனத்தின் சொத்துகளை ஏமாற்றி மோசடி செய்யும் நோக்கத்தில் யங் இந்தியன் நிறுவனம் வெறும் ரூ. 5 லட்சம் முதலீட்டில் கடந்த 2010-இல் தொடங்கப்பட்டுள்ளது.
வருமான வரி ஆவணங்களின்படி, இந்த நிறுவனத்தின் 83.3 சதவீத பங்குகள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வசம் உள்ளன. காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா வசம் 15.5 சதவீத பங்குகளும், கட்சியின் பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் வசம் 1.3 சதவீத பங்குகளும் உள்ளன.
இந்நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சுப்பிரமணியன் சுவாமி 2012-இல் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஜாமீன் கிடைத்தது: வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி சோனியா, ராகுல் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை தில்லி உயர் நீதிமன்றம் 2015 டிசம்பர் 7-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அதே மாதம் 19-ஆம் தேதி சோனியா, ராகுல் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். தொடர்ந்து, அவர்கள் அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
வருமான வரித் துறை நடவடிக்கை: இதனிடையே, யங் இந்தியன் நிறுவனத்தின் மீது வருமான வரித் துறை தனது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. இந்நிலையில், வருமான வரித் துறையின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்; இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி யங் இந்தியன் நிறுவனம் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.முரளிதர், சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
யங் இந்தியன் நிறுவனத்தின் மீதான வருமான வரித் துறையின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. மனுதாரர்கள், இந்த மனுவை தாங்களாக விலக்கிக் கொண்டு, மேற்படி துறையின் மதிப்பீட்டு அதிகாரியை நாட வேண்டும்.
யங் இந்தியன் நிறுவனம் தனது குறைகளை வருமான வரித் துறையின் மதிப்பீட்டு அதிகாரியிடம் இதுவரை தெரிவிக்கவில்லை.
எனவே, இந்நிறுவனம் வருமான வரித் துறையை தான் முதலில் நாட வேண்டும். அதன் பிறகும், அந்த நிறுவனம் திருப்தி அடையாதபட்சத்தில் நீதிமன்றத்தை நாடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, யங் இந்தியன் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி மனுவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.
சோனியா காந்திக்கு நோட்டீஸ்: இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மாநில அரசுக்குச் சொந்தமான நிலத்தை உரிய அனுமதியின்றி பெண்களுக்கான தொழில் பயிற்சி நிலையம் நடத்துவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறி, சோனியாவுக்கு அமேதி மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

பாஜக வரவேற்பு
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவுக்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய சட்டத் துறை அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த வழக்கு நீதிநெறி மற்றும் தார்மீக நெறிமுறைகளை உள்ளடக்கியதாகும். வருமான வரித் துறையின் விசாரணைக்கு உறிய ஒத்துழைப்பு நல்குவது, சம்பந்தப்பட்டவர்களுக்கே நன்மை பயக்கும்.
ஜனநாயகம், பொது ஒழுக்கம் சார்ந்து செயல்படுகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT