சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில், ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி. வன்ஸாரா (ஓய்வு), ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் எம்.என். ஆகியோருக்கு மும்பை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில், ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி. வன்ஸாரா (ஓய்வு), ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் எம்.என். ஆகியோருக்கு மும்பை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட சொராபுதீன் ஷேக், தனது மனைவி கெளசர்பியுடன் ஹைதராபாத் நகரிலிருந்து மகாராஷ்டிர மாநிலத்தின் சாங்க்லி நகருக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை குஜராத் போலீஸார் கடத்திச் சென்று, தலைநகர் காந்திநகருக்கு அருகே ஒரு இடத்தில் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அந்த போலி என்கவுன்ட்டருக்கான ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியையும் குஜராத்தின் சாப்ரி கிராமத்தில் போலீஸார் சுட்டுக் கொன்றுவிட்டு, இந்த இரு படுகொலைகளையும் தங்களுடன் நிகழ்ந்த மோதலின்போது நேரிட்ட இறப்புகளைப் போன்று அவர்கள் ஜோடித்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும், இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மாயமான சொராபுதீனின் மனைவி கெளசர்பியையும் போலீஸார் படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இதுதொடர்பாக குஜராத்தில் நடந்து வந்த வழக்கை, அந்த மாநிலத்துக்கு வெளியே நடத்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இதுகுறித்து மும்பையிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 38 பேரில், 14 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 15 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. எனினும், அந்த 14 அதிகாரிகளில் எம்.கே. அமீன் என்பவர் விடுவிக்கப்பட்டதை மட்டும் எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல் முறையீடு செய்தது. இதையடுத்து, வழக்கிலிருந்து மற்ற அதிகாரிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சிபிஐ ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? என்று உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி கேள்வியெழுப்பியது.
இதற்கிடையே, வழக்கிலிருந்து அதிகாரிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சொராபுதீனின் சகோதரர் ருபாபுதீன் தாக்கல் செய்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரேவதி மோஹித்தேர், ஐ.பி.எஸ். அதிகாரிகள் ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் எம்.என்., டி.ஜி. வன்ஸாரா ஆகியோரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் திட்டம் உள்ளதா? என்று சிபிஐயிடம் கேள்வியெழுப்பினார்.
இந்தச் சூழலில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நீதிபதி எம்.எம். பதர் வியாழக்கிழமை மேற்கொண்டார்.
அப்போது அவர், ருபாபுதீனின் மனு குறித்து விளக்கமளிக்குமாறு ஐ.பி.எஸ். அதிகாரிகள் ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் எம்.என்., டி.ஜி. வன்ஸாரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும், அந்த நோட்டீஸ் அவர்களுக்குச் சென்று சேர்ந்ததை உறுதி செய்வதற்கு வசதியாக அதிகாரிகளின் முகவரிகளை ருபாபுதீனுக்குத் தெரியப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.