இந்தியா

உ.பி. உள்ளாட்சித் தேர்தல்: குடியரசுத் தலைவரின் உறவினருக்கு பாஜகவில் வாய்ப்பு மறுப்பு

தினமணி

உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உறவினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சொந்த மாநிலமான உத்தரப் பிரதேச மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 22-ஆம் தேதி முதல் மூன்று கட்டமாக நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக, வரும் 22-ஆம் தேதி 24 மாவட்டங்களிலும், 2-ஆவது கட்டமாக 26-ஆம் தேதி 25 மாவட்டங்களிலும், 3-வது கட்டமாக 29-ஆம் தேதி 26 மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.
 16 மாநகராட்சிகள், 198 நகராட்சிகள், 438 நகர பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. 3.32 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 36,269 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. டிசம்பர் 1-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக, எதிர்க்கட்சிகளான சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகியவை முழுவீச்சில் களத்தில் இறங்கியுள்ளன.
 கான்பூர் அருகேயுள்ள ஜீஞ்சாக் நகரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உறவினர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். ஜீஞ்சாக் நகர் நகராட்சித் தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிட ராம்நாத் கோவிந்தின் அண்ணன் மகன் பங்கஜின் மனைவி தீபா கோவிந்த் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக வேறு ஒரு பெண் அந்த நகராட்சியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
 இதனால், அதிருப்தியடைந்த தீபா கோவிந்த் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தீபாவின் கணவர் பங்கஜ் கூறுகையில், "பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பெண்மணி இதற்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தவர்.
 மேலும், போதிய கல்வியறிவும் இல்லாதவர்.
 அதே நேரத்தில் தீபா பாரம்பரியமான பாஜக குடும்பத்தைச் சேர்ந்தவர், முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். நகராட்சியில் மக்கள் ஆதரவும் அவருக்கு உள்ளது. அவர் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவார்' என்றார்.
 இது தொடர்பாக மாவட்ட பாஜக தலைவர் ராகுல்தேவ் அக்னிஹோத்ரி கூறுகையில், "நகராட்சியில் கட்சிரீதியாகவும், மக்கள் மத்தியிலும் செல்வாக்கு உள்ளவர் குறித்து ஆய்வு நடத்திதான் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், பாஜக ஒருபோதும் குடும்ப அரசியலை ஊக்குவிப்பது இல்லை.
 பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பத்தில் இருந்து அவரைத் தவிர யாரும் வார்டு உறுப்பினர் தேர்தலில் கூட போட்டியிடவில்லை. தீபாவின் குடும்பத்தினருடன் பேச்சு நடத்தி அவரை போட்டியில் இருந்து வாபஸ் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர் கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT