ஆசிய செல்வந்தர்கள் பட்டியலில் அம்பானி குடும்பத்துக்கு முதலிடம்
'ஃபோர்ப்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள ஆசியாவின் செல்வவளம் மிக்க குடும்பத்தினர் பட்டியலில் முகேஷ் அம்பானியின் குடும்பம் முதலிடத்தில் உள்ளது.
'ஃபோர்ப்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள ஆசியாவின் செல்வவளம் மிக்க குடும்பத்தினர் பட்டியலில் முகேஷ் அம்பானியின் குடும்பம் முதலிடத்தில் உள்ளது. அவர்களது சொத்து மதிப்பு 4,408 கோடி டாலர்களாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.90 லட்சம் கோடி) உயர்ந்திருப்பதாகவும் அந்த இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ-யின் குடும்பத்தினர் 4,008 கோடி டாலர்கள் (ரூ.2.65 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டு நிலவரப்படி சாம்சங் நிறுவனத் தலைவர் லீ முதலிடத்திலும், அம்பானி மூன்றாம் இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிகழாண்டில் ஆசியாவின் செல்வவளம் மிக்க 50 குடும்பங்களின் பட்டியலை 'ஃபோர்ப்ஸ்' இதழ் வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணித் தொழிலதிபர்கள் பலரது குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் அம்பானி குடும்பத்தினர் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்திய ஜியோ சிம் சேவைகள் நாடு முழுவதும் பலத்த வரவேற்பைப் பெற்றன. தற்போதைய நிலவரப்படி அவரது ஜியோ சிம் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 14 கோடியாக உள்ளது.
இதன் காரணமாக கடந்த ஆண்டு 1,900 கோடி டாலர்களாக (ரூ.1.25 லட்சம் கோடி) இருந்த அம்பானி குடும்பத்தினரின் சொத்து மதிப்பு நிகழாண்டில் 4,408 டாலர்களாக உயர்ந்துள்ளதாக 'ஃபோர்ப்ஸ்' இதழ் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த லீ இரண்டாமிடத்துக்கு வந்தாலும், அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பும் இரு மடங்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது இடத்தில் ஹாங்காங்கைச் சேர்ந்த சன் ஹாங்காய் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் க்வாக்-இன் குடும்பத்தினர் உள்ளனர். அவர்களது சொத்து மதிப்பு 4,004 கோடி டாலர்களாகும். இந்திய மதிப்பில் அதன் மதிப்பு சுமார் ரூ. 2.62 லட்சம் கோடி.
'ஃபோர்ப்ஸ்' இதழ் வெளியிட்ட அந்தப் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் 18 இந்திய செல்வந்தர்களின் குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன. விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் பிரேம்ஜி (11-ஆவது இடம்; ரூ.1.25 லட்சம் கோடி), அசோக் லேலாண்ட் தலைவர் ஹிந்துஜா (12-ஆவது இடம்; ரூ.1.22 லட்சம் கோடி) ஆகியோரது குடும்பங்கள் முதல் 15 இடங்களில் உள்ளன. அவர்களைத் தவிர லட்சுமி மிட்டல், பஜாஜ், ஜிண்டால், கோத்ரெஜ், பிர்லா ஆகியோரது குடும்பத்தினரும் அப்பட்டியலில் உள்ளனர்.