முகப்பு
இந்தியா

இறையாண்மையைக் காக்க ராணுவ வலிமையை பயன்படுத்த இந்தியா தயங்காது: குடியரசுத் தலைவர்

அமைதியை விரும்பும் நாடு என்ற போதிலும், நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காக ராணுவ வலிமையைப் பயன்படுத்த இந்தியா தயங்காது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் உள்ள  விமானப்படையின் '117 ஹெலிகாப்டர் யூனிட்' பிரிவுக்கும், '223 ஸ்குவாட்ரன்' பிரிவுக்கும்  விருது வழங்கி கௌரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
பகிர்:

அமைதியை விரும்பும் நாடு என்ற போதிலும், நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காக ராணுவ வலிமையைப் பயன்படுத்த இந்தியா தயங்காது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
தேசத்தைப் பாதுகாப்பதற்காக விலைமதிக்க முடியாத தியாகங்களைப் புரிந்து வரும் ராணுவத்தினரை நாட்டு மக்கள் என்றென்றும் நினைவுகூருவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
பஞ்சாபின் ஆதம்பூரில் அமைந்துள்ள விமானப் படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அந்த மாநிலத்துக்கு வியாழக்கிழமை சென்றார். மாநில ஆளுநர் வி.பி. சிங் பத்னோரும் உடன் சென்றார். 
விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல், மாநில அமைச்சர்கள் ராணா குர்ஜித் சிங், நவஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை வரவேற்றனர். மாநில முன்னாள் துணை முதல்வரும், சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவருமான சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோரும் அப்போது உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து ஆதம்பூரில் அமைந்துள்ள 223 படைப் பிரிவு, 117 ஹெலிகாப்டர் பிரிவு அமைந்துள்ள தளத்துக்குச் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் படைப் பிரிவினருக்கு விருதுகளை வழங்கி அவர் கெளரவித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால், அவற்றில் உலக நாடுகளின் கவனத்தை பெருமளவு ஈர்த்தது நமது படைத் திறனும், அளப்பரிய வல்லமையும்தான்.
நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவரும் எந்த வித அச்சுறுத்தலும் இன்றி நிம்மதியுடன் தினமும் உறங்கச் செல்கின்றனர். ஏனெனில், ராணுவத்தினர் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை அவர்களுக்குத் தெரியும்.
தேசத்துக்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்து வரும் நமது பாதுகாப்புப் படையினர், நாட்டு மக்கள் அனைவரின் போற்றலுக்கும் உரியவர்கள். 
இந்தியா அமைதியை வலியுறுத்தும் நாடு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 
அதேவேளையில், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டிய சூழல் எழுந்தால் அனைத்து வகையான ராணுவ வலிமைகளைப் பயன்படுத்தவும் நாம் தயங்க மாட்டோம். 
அத்தகைய நிலை உருவானபோது எல்லாம் இந்தியப் படையினர் எழுச்சியுடனும், தீரத்துடனும் செயல்பட்டு தங்களது வலிமையை பறைசாற்றியிருக்கின்றனர் என்றார் ராம்நாத் கோவிந்த்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அமிருதசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்குச் சென்று வழிபட்ட குடியரசுத் தலைவர், அங்கு சம பந்தி விருந்தில் அமர்ந்து பக்தர்களுடன் உணவருந்தினார். 
பின்னர், ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம் நிகழ்ந்த அமர் ஜோதி பகுதிக்குச் சென்ற அவர், வீரமரணம் அடைந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

முழு கட்டுரையைப் படிக்க →