பருப்பு வகைகளுக்கு ஏற்றுமதித் தடை நீக்கம்
அனைத்து வகையான பருப்புகளையும் ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு வியாழக்கிழமை நீக்கியுள்ளது.
அனைத்து வகையான பருப்புகளையும் ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு வியாழக்கிழமை நீக்கியுள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்னதாக, மத்திய உணவுத் துறை செயலாளர் தலைமையில் வர்த்தகம், வேளாண்மை, வருவாய், நுகர்வோர் விவகாரம் ஆகிய அமைச்சகங்களின் செயலாளர்கள், பருப்பு வகைகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை ஆய்வு செய்யும் வெளிநாட்டு வர்த்தகப் பிரிவு இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழு, இது தொடர்பாக முடிவெடுத்து மத்திய அமைச்சரவைக்குப் பரிந்துரைத்திருந்தது.
இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், 'பருப்பு வகைகளின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள், தங்களை விளைபொருள்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பருப்பு வகைகளுக்கு அவர்களால் அதிகபட்ச விலையைப் பெற முடியும்' என்றார்.
இந்தியாவில் 2016-17-ஆம் ஆண்டில் 2.3 கோடி டன் பருப்பு உற்பத்தி செய்யப்பட்டது. நமது நாடு பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றத்தை அடுத்து, அதன் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதன் மூலம் சர்வதேச அளவில் பருப்பு ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் இந்தியா போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் உள்நாட்டுத் தேவையை நிறைவு செய்வதற்காக பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.
வீடுகளுக்கான மானியம்: பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் மத்திய அரசு அளித்து வரும் வட்டி மானியத்தைப் பெறுவதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன.
இதன்படி, நடுத்தர வருவாய்ப் பிரிவு -1-இன் கீழ் முன்பு 90 சதுர மீட்டர் (968.752 சதுர அடி) வரை உள்ள வீட்டுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது இந்த அளவு 120 சதுர மீட்டராக (1291.668 சதுர அடி) அதிகரிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வருவாய்ப் பிரிவு -2 இன் கீழ் கட்டப்படும் வீடுகள் 110 சதுர மீட்டர் (1184.03 சதுர அடி) என்ற அளவில் இருக்க வேண்டும் என்று முன்பு இருந்தது இப்போது 150 சதுர மீட்டராக (1614.585 சதுர அடி) அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 2017 ஜனவரி 1-இல் இருந்து முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது.