இந்தியா

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்! 

IANS

புதுதில்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களை அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா (இப்போதைய தலைமை நீதிபதி) தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இது தொடர்பான தங்கள் முடிவை கடந்த பிப்ரவரி மாதம் நிறுத்தி வைத்தது.

முன்னதாக, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கோரி மனு தாக்கல் செய்த இளம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.ஆனால், 10 முதல் 50 வயது பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை இருக்கும் என்பதால் கோயிலில் புனிதத்தன்மையை பராமரிக்க முடியாது என்ற காரணத்தால் அவர்களை கோயிலில் அனுமதிப்பதில்லை என்று ஐயப்பன் கோயில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், "சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பதில்லை என்ற விதி, ஆண்களுக்கும், பெண்களுக்கு இடையே வேறுபாடு காட்டுவது என்று ஆகாது. இது குறிப்பிட்ட வயதுடைய பெண்களுக்கு இடையே வேறுபாடு காட்டுவது மட்டும்தான். மதரீதியாக இதுபோன்ற சில விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. உதாரணமாக கேரள மாநிலத்திலேயே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை' என்றார்.

ஆனால், பொது நல மனு தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மத வழிபாட்டில் ஆண், பெண் என பாகுபாடு காட்டுவது அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சம உரிமைக்கு எதிரானது என்று வாதிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் பானுமதி மற்றும் அசோக் பூஷன் அடங்கிய அமர்வு  முன்பு விசாரணைக்கு வந்தது.அப்பொழுது இந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.   

அத்துடன் அரசியல் சாசன அமர்வுக்கு என ஆறு கேள்விகளையும் அவர்கள் அளித்துள்ளனர். அவற்றுள் சில பின்வருமாறு:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களை அனுமதிப்பபது இல்லை என்று பின்பற்றப்பட்டு வரும் முடிவானது ஏற்றுக் கொள்ளக் கூடியதா?

அத்துடன் உடலியல் ரீதியிலான காரணங்கள் மட்டுமே பெண்களை அனுமதிக்காமல் இருப்பதற்கு சரியானதா?   

பொது வழிபாட்டுக்குரிய கேரள ஹிந்து ஆலய சட்டங்களின்படி பெண்களுக்கு எல்லா ஆலயங்களுக்குள்ளும் செல்ல  அனுமதி உள்ளது. அப்படி இருக்கையில் இந்த தடையானது அதை மீறுவதாகாதா?

இத்தகைய கேள்விகளுக்கும் அரசியல் சாசன அமர்வு பதில்  அளிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT