இந்தியா

கடந்த ஆண்டு பணியின்போது 383 காவலர்கள் வீரமரணம்

DIN

கடந்த ஓராண்டில் மட்டும் 383 காவலர்கள் பணியின்போது எதிரிகளால் கொல்லப்பட்டனர் என்று உளவுத் துறை(ஐ.பி.) இயக்குநர் ராஜீவ் ஜெயின் கூறினார்.
காவலர் வீரவணக்க தினம், நாடு முழுவதும் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பணியின்போது கொல்லப்பட்ட காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராஜீவ் ஜெயின் பேசியதாவது:
கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, நாடு முழுவதும் 383 காவலர்கள் பணியின்போது எதிரிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களில், 76 பேர் உத்தரப் பிரதேச காவல் துறையினர் ஆவர். 56 பேர் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள். 49 பேர் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள். 42 பேர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த காவலர்கள்.
இதுதவிர, சத்தீஸ்கரில் 23 பேரும், மேற்கு வங்கத்தில் 16 பேரும், தில்லியில் 13 பேரும், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் 13 பேரும், பிகார், கர்நாடக மாநிலங்களில் தலா 12 பேரும், இந்திய திபெத் எல்லைப் போலீஸார் 11 பேரும் உயிரிழந்தனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள், பாகிஸ்தானில் இருந்து நடத்தப்படும் எல்லை தாண்டிய தாக்குதல்களை எதிர்கொண்டபோதும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்ட நேரத்திலும், நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கைகளின்போதும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்ட வேளையிலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றார் அவர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக் பகுதியில் கடந்த 1959-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி சீனப் படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உயிர்த்தியாகம் செய்யும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் வீரவணக்க தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT