இந்தியா

"புளூவேல்' விளையாட்டுக்கு தடை கோரி மதுரை வழக்குரைஞர் மனு

DIN

இந்தியாவில் புளூவேல் விளையாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் என்.எஸ். பொன்னையா (73) தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
நாடு முழுவதும் புளூவேல் இணையதள விளையாட்டில் ஈடுபடும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்வது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சில மாணவர்கள் இந்தக் கொடூர விளையாட்டால் உயிரிழந்துவிட்டனர்.
இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் பொன்னையா, உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சி.ஆர். ஜெய சுகின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், இந்தியாவில் கடந்த 5-ஆம் தேதி வரை 200 பேர் வரை புளூவேல் விளையாட்டால் உயிரிழந்துவிட்டதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் 13 முதல் 15 வயதுக்குள்பட்டவர்கள்.
மதுரை பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்த விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டதுடன், இந்த விளையாட்டை தனது நண்பர்கள் 150 பேருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இளைய தலைமுறையின் உயிரைப் பறிக்கும் இந்த விளையாட்டை தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் உரிய தகவல் உதவிகளை அளிக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, இதேபோன்றதொரு வழக்கில், ஃபேஸ்புக், கூகுள், யாகூ உள்ளிட்டஇணையதள நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டுமென்று தில்லி உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT