இந்தியா

அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவை அரசே வழங்க வேண்டும்: டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல்

DIN

அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக செலவு செய்வதைத் தடை செய்ய வேண்டும்; தேர்தல் செலவுக்கான நிதியை அரசே வழங்க வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் ஹைதராபாதில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: உண்மையில் தேர்தல் செலவுகளுக்கு அரசே நிதி ஒதுக்குவதை நான் விரும்பவில்லை. ஆனால் தற்போது பல்வேறு இடங்களில் நடப்பதைப் பார்த்தால், தேசியத் தேர்தல் நிதியம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன். தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்படும் அந்த நிதியத்துக்கு நிறுவனங்களும், தனிநபர்களும் நன்கொடை வழங்கலாம் என்று அறிவிக்க வேண்டும். அந்த நன்கொடைகளுக்கு 100 சதவீத வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டும். இந்தப் பணத்தை தேர்தல் நிதியாக கட்சிகளுக்கு அளிப்பதற்குப் பயன்படுத்தலாம். அது போதாது என்ற நிலை ஏற்பட்டால் அப்போது அரசு ஏதாவது நிதியுதவியை அளிக்கலாம்.
தேசியத் தேர்தல் நிதியம் அமைக்கப்பட்டால் அதற்கு நிதி வழங்க நிறுவனங்களும், தனிநபர்களும் விரும்புவார்கள். ஏனெனில், அந்தத் தொகைக்கு அவர்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு கிடைக்கும் என்பதே அதற்குக் காரணமாக இருக்கும். இந்த நடவடிக்கையானது, பெரு நிறுவனங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையே நட்புறவு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தும்.
அவ்வாறு திரட்டப்படும் நிதியை பல்வேறு தேர்தல்கக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதை முடிவு செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தலாம். தேசியத் தேர்தல் நிதியம் அமைக்கப்பட்டு விட்டால் அதன் பின் எந்தவொரு கட்சியும் தேர்தலுக்காக செலவழிப்பது தடை செய்யப்பட வேண்டும்.
அதன் பிறகும் அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக செலவழிக்கும் வாய்ப்பு உள்ளதை நான் ஒப்புக் கொள்கிறேன். எனினும், அவ்வாறு எந்தக் கட்சியாவது தேர்தலுக்காக செலவு செய்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அவர் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் தகுதிநீக்கத்துக்கு வழிவகுக்கக் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
தேர்தல் செலவுக்கு அரசே நிதி வழங்கும்போதும், அதற்காகச் செலவிடும் நபர்கள் விஷயத்தில் நாம் மிகவும் கடுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்தக் கட்சியும் தேர்தலுக்கு பணம் செலவிடுவதை அனுமதிக்கக் கூடாது.
தற்போது தேர்தல் செலவு தொடர்பான சட்டத்தில் பல்வேறு ஓட்டைகள் உள்ளன. 
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செய்யும் செலவுக்குதான் தற்போது உச்ச வரம்பு உள்ளதே தவிர, கட்சிகள் செய்யும் செலவுக்கு உச்ச வரம்பு இல்லை. இதனால் கட்சிகள் ரொக்கமாக மேற்கொள்ளும் தேர்தல் செலவுகளை நம்மால் நிரூபிக்க முடிவதில்லை.
அதேபோல், அரசியல் கட்சிகளின் உள்கட்சித் தேர்தல்கள், அவற்றின் நிதி மேலாண்மை ஆகியவற்றை நெறிப்படுத்துவதற்காக தனியாகச் சட்டம் இயற்றப்பட வேண்டும். ஐந்து ஆண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய வழக்குகளில் நீதிமன்றத்தால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் குற்றவாளிகளை, தேர்தல்களில் போட்டியிடுவதில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

உழைப்பாளர் தினம்

திரைக் கதிர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT