இந்தியா

ஊழல் வழக்கு: சிபிஐ முன்பு ஆஜராக 2 வாரம் அவகாசம் கோரினார் லாலு

DIN

ஊழல் வழக்கில் அனுப்பப்பட்டிருந்த சம்மனை ஏற்று, சிபிஐ முன்பு ஆஜராவதற்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் 2 வார காலம் அவகாசம் கேட்டுள்ளார்.
மத்திய ரயில்வேத் துறை அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்த காலத்தில், ராஞ்சி, புரி ஆகிய இடங்களில் இருக்கும் ஐஆர்சிடிசிக்கு சொந்தமான 2 உணவு விடுதிகளைப் பராமரிப்பது தொடர்பான ஒப்பந்தப்புள்ளிகள், வினய், விஜய் கோச்சார் ஆகியோருக்குச் சொந்தமான சுஜாதா ஹோட்டல் என்ற தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளிகளை சுஜாதா ஹோட்டலுக்கு அளித்ததற்குப் பிரதிபலனாக, பாட்னாவில் இருந்த அந்த ஹோட்டலுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலம், பினாமி பெயரில் லாலு, அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி, முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தாவின் மனைவி சரளா குப்தா, விஜய் கோச்சார், வினய் கோச்சார், டிலைட் மார்க்கெட்டிங் நிறுவனம், ஐஆர்சிடிசி முன்னாள் நிர்வாக இயக்குநர் பி.கே. கோயல் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
அந்த வழக்கில், ரயில்வே அமைச்சராக லாலு பதவி வகித்தபோது, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, ஐஆர்சிடிசி ஹோட்டல்களை பராமரிக்கும் ஒப்பந்தப்புள்ளிகளை சுஜாதா ஹோட்டலுக்கு அளித்து, அதற்கு பிரதிபலனாக டிலைட் மார்க்கெட்டிங் நிறுவனம் என்ற போலி நிறுவனத்தின் பெயரில் 3 ஏக்கர் நிலத்தை பெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணையில் கடந்த 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் நேரில் ஆஜராகும்படி, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. 
ஆனால், ராஞ்சி நீதிமன்றத்தில் நடைபெறும் மற்றோர் வழக்கில் ஆஜராக வேண்டியிருப்பதை சுட்டிக்காட்டி, சிபிஐ முன்பு லாலு பிரசாத் நேரில் ஆஜராகவில்லை. தேஜஸ்வியும் தனக்கு பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிவித்து, சிபிஐ முன்பு ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து, லாலு பிரசாத்தை 25-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படியும், தேஜஸ்வியை 26-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படியும் சிபிஐ சார்பில் மீண்டும் சம்மன்கள் அனுப்பப்பட்டிருந்தன.
அதன்படி, சிபிஐ அலுவலகத்தில் லாலு பிரசாத் திங்கள்கிழமை ஆஜராக வேண்டும். ஆனால் அவருக்குப் பதிலாக அவரது வழக்குரைஞர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது சிபிஐ முன்பு லாலு பிரசாத் ஆஜராவதற்கு 2 வாரகாலம் அவகாசம் வேண்டும் என்று வழக்குரைஞர் கோரிக்கை விடுத்தார். இந்த தகவலை சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் மேலும் கூறுகையில், 'லாலு பிரசாதின் கோரிக்கை மீது சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது; விரைவில் அதன்மீது முடிவெடுக்கப்படும்' என்றன.
லாலு பிரசாத்தைப் போல, சிபிஐ அலுவலகத்தில் தேஜஸ்வி யாதவ் செவ்வாய்க்கிழமை (செப்.26) ஆஜராக வேண்டும். அவர் ஆஜராவாரா? மாட்டாரா? என்பது குறித்து வழக்குரைஞர் எதுவும் தெரிவிக்கவில்லை என்று சிபிஐ வட்டாரங்கள் குறிப்பிட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT