இந்தியா

அரசுத் திட்டங்கள்: ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு

DIN

அரசின்சலுகைகளையும், மானியங்களையும் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடுவை மத்திய அரசு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
ஆனால், இதுவரை ஆதார் எண் பெறாதவர்களுக்கே இந்தச் சலுகைப் பொருந்தும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியர்கள் அனைவருக்கும் பிரத்யேக அடையாள எண்ணை வழங்குவதற்காக ஆதார் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் தனிநபர் பிரத்யேக அடையாள ஆணையம்
(யுஐடிஏஐ) மூலமாக இந்த ஆதார் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆதார் எண்ணை அனைவருக்கும் கட்டாயமாக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, அரசு திட்டங்களுக்கும், அரசின் சலுகைகளையும் பெறுவதற்கு ஆதார் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, இலவச சமையல் எரிவாயு உருளைத் திட்டம், மண்ணெண்ணெய் மற்றும் உர மானியம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சமையல் எரிவாயு மானியம், பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட சுமார் 135 திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவுப் பிறப்பித்தது.
மேலும், இந்தத் திட்டங்களின் பலன்களைப் பெற, ஆதார் எண்ணை இணைப்பதற்கு செப்டம்பர் 30-ஆம் தேதியை இறுதிக் கெடுவாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்தச் சூழ்நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பில் புதன்கிழமை ஓர் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதில், அரசுத் திட்டங்களுக்கும், அரசின் சலுகைகளுக்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதற்கான இறுதிக் கெடு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் திட்டங்களால் அதிகம் பேர் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், இன்னமும் ஆதார் எண்ணைப் பெறாத பயனாளிகளுக்கே இந்தத் தேதி நீட்டிப்புச் சலுகை பொருந்தும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT