முகப்பு
இந்தியா

100 நாள்களில் செயல் திட்டம்: பொதுத் துறை நிறுவனங்களுக்கு மோடி அறிவுறுத்தல்

பொதுத் துறை நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தை 100 நாள்களில் அளிக்க வேண்டும் என்று அந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 1:06 AM
பகிர்:

பொதுத் துறை நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தை 100 நாள்களில் அளிக்க வேண்டும் என்று அந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் மாநாடு தில்லி விஞ்ஞான் பவனில் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்வேறு மத்திய அமைச்சகங்களின் உயரதிகாரிகளும், பொதுத் துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
நிறுவனங்கள் செலவிடும் சமூகப் பொறுப்புணர்வு நிதியை ஆண்டுதோறும் ஒவ்வொரு திட்டத்தை முன் வைத்து செயல்படுத்த வேண்டும். அந்த நிதியில் இருந்து திறன்மேம்பாட்டுப் பயிற்சிகளையும் அளிக்கலாம். பொதுத் துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு முழுமையான அளவுக்கு செயல்பாட்டு சுதந்திரம் அளித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி பொதுத் துறை நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி காண முடியும். நாடு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதிலும், வளர்ச்சியிலும் பொதுத் துறை நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் உங்களிடம் இருந்து அதிக விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். உங்களிடம் தெரிந்து கொண்டதை நான் அரசு நிர்வாகத்திலும் செயல்படுத்த முடியும் என்று நம்புகிறேன். பொதுத் துறை நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு வழிமுறைகளை இன்று என்னிடம் தெரிவித்தீர்கள். இவை அûனைத்தையும் ஒருங்கிணைந்து ஒரு செயல்திட்டமாக அடுத்த 100 நாள்களில் என்னிடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த செயல்திட்டங்கள் அமல்படுத்தக் கூடியதாகவும், இலக்குகளை எட்டக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து பொதுத் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான உபகரணங்கள், கருவிகளைக் கொள்முதல் செய்ய வேண்டும். இதன் மூலம் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும். கடந்த காலத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளை மறந்துவிட்டு, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள் செயல்பட வேண்டும். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வும் மிகவும் முக்கியமானது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.