எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மத்திய அரசு தான் காரணம்: லாலு பிரசாத் மனைவி குற்றச்சாட்டு
தங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மத்திய அரசு தான் காரணம் என்று பிகார் முன்னாள் முதல்வரும் லாலு பிரசாத் யாதவ் மனைவியுமான ராப்ரி தேவி குற்றம்சாட்டியுள்ளார்.
தங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மத்திய அரசு தான் காரணம் என்று பிகார் முன்னாள் முதல்வரும் லாலு பிரசாத் யாதவ் மனைவியுமான ராப்ரி தேவி செவ்வாய்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 32 பிகார் பாதுகாப்புப் படையினரும் மாநில அரசால் செவ்வாய்கிழமை திரும்பப்பெறப்பட்டனர். இதுகுறித்து அவரது மனைவி ராப்ரி தேவி கடிதம் ஒன்றை பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு எழுதியுள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது:
எங்கள் வீட்டுக்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களை எவ்வித முன் அறிவிப்புமின்றி பிகார் அரசு அவசரமாக திரும்பப்பெற்றுள்ளது. இதனால் எங்களின் பாதுகாப்புக்கு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் எனது கணவர் லாலு பிரசாத் யாதவ் கைது செய்யப்பட்டபோது பாதுகாப்பு படையினர் திரும்பப்பெறப்படுவார்கள் என்று பிகார் அரசு தெரிவித்தும் அவர்கள் பணியில் தொடர்ந்து வந்தனர். இதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருப்பினும் தற்போது அவசரமாக இச்செயல் நடந்துள்ளது.
Advertisement
தற்போது பாதுகாப்பு இல்லாத எங்கள் குடும்பத்துக்கு ஏதாவது நடந்தால் அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தான் முழுப் பொறுப்பு. இது பிகார் முதல்வர் நிதிஷ் குமார், சுஷில் மோடி ஆகியோரது அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை. இதனால் எங்களின் கட்சியைச் சேர்ந்தவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். இது ஒரு பொய்யான அரசாங்கம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.