'நீதிமன்ற அவமதிப்பு' என்பதற்கான வரையறையை கட்டுப்படுத்த வேண்டாம்: சட்ட ஆணையம்
'நீதிமன்ற அவமதிப்பு' என்பதற்கான வரையறையை கட்டுப்படுத்த வேண்டாம் என்று மத்திய சட்ட அமைச்சகத்தை, சட்ட ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
'நீதிமன்ற அவமதிப்பு' என்பதற்கான வரையறையை கட்டுப்படுத்த வேண்டாம் என்று மத்திய சட்ட அமைச்சகத்தை, சட்ட ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
'நீதிமன்ற அவமதிப்பு' என்ற வார்த்தைக்கான வரையறையை கட்டுக்குள் கொண்டுவருமாறு சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டதற்கு அளித்த பதிலில் சட்ட ஆணையம் இவ்வாறு கூறியுள்ளது.
மேலும், 'நீதிமன்றங்களுக்கான அதிகாரம் அரசியலமைப்பில் இருந்து வருகிறதே தவிர, சட்டங்களில் இருந்து அல்ல. எனவே, சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்தாலும், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் நீதிமன்றங்கள் தனது அதிகாரத்தை செலுத்த இயலும்' என்றும் கூறியுள்ளது.
முன்னதாக, 'நீதிமன்ற அவமதிப்பு' என்ற வார்த்தைக்கான வரையறையை 'நீதிமன்றத்தின் உத்தரவு அல்லது அறிவுறுத்தலுக்கு வேண்டுமென்றே கீழ்படியாமல் இருப்பது' என்ற அளவிற்கு கட்டுப்படுத்தும் வகையில் 'அவமதிப்புச் சட்டம் 1971'-இல் திருத்தம் கொண்டுவருவதை கருத்தில் கொள்ளுமாறு சட்ட அமைச்சகத்தின் நீதித்துறை, சட்ட ஆணையத்திடம் கேட்டிருந்தது. அத்துடன், 'குற்றவியல் அவமதிப்பு' என்ற பிரிவை நீக்குவதற்கும் கோரியிருந்தது.
இந்நிலையில், சட்ட ஆணையம் அதுதொடர்பான அறிக்கையை அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
'குற்றவியல் அவமதிப்பு ' உள்பட, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தண்டனை வழங்குவதற்கு, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டம் அளிக்கிறது.
இந்த விவகாரத்தில் அவற்றின் அதிகாரம் சட்ட விதிகளைச் சார்ந்தது அல்ல. எனவே, 'குற்றவியல் அவமதிப்பு' என்ற பிரிவை நீக்கக் கோரும் பரிந்துரை, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் அதிகாரத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
மேலும், அவமதிப்பு தொடர்பான சட்டம் இயற்றப்படும் முன்பாகவே, இந்த இயல்பான அதிகாரங்கள் உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு இருந்து வந்துள்ளது. எனவே, அவமதிப்பு வழக்குகளில், நீதிமன்றங்களில் அதிகாரங்கள் சட்டங்களைச் சார்ந்தது இல்லை. இதனால், சட்டங்களில் கொண்டு வரும் திருத்தங்களால், அரசியலமைப்பின் விதிகள் 129 மற்றும் 215-இன் கீழ் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தண்டனை வழங்க உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு கிடைக்கும் அதிகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்த இயலாது என்று அந்த அறிக்கையில் சட்ட ஆணையம் கூறியுள்ளது.