கர்நாடக தேர்தல் சுவாரஸ்யம்: பாஜக வேட்பாளர் பட்டியலில் இவர்களுக்குத்தான் முதலிடம்
சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என கறைபடிந்த கைகளுக்குத்தான் பாஜக வேட்பாளர் பட்டியலில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூர்: சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என கறைபடிந்த கைகளுக்குத்தான் பாஜக வேட்பாளர் பட்டியலில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 82 வேட்பாளர்களின் பெயர்களைக் கொண்ட இரண்டாவது பட்டியலை கடந்த ஞாயிறன்று பாஜக வெளியிட்டது.
இந்த பட்டியலில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் கட்டா சுப்ரமண்யா நாயுடு, எஸ்.என். கிருஷ்ணையா ஷெட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Advertisement
இது மட்டும் அல்லாமல், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹரதாலு ஹாலப்பாவுக்கும் தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு நில அபகரிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டவர் கட்டா சுப்ரமணியா. கிருஷ்ணையா ஷெட்டியும், பல கோடி மதிப்புள்ள நில மோசடியில் சிக்கி சிறைக்குச் சென்றவர். பிறகு மேல்முறையீடுகளில் விடுதலையானார்.
ஹாலப்பா, தனது நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போதிய ஆதாரம் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டவர்.
பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டி செய்த சுரங்க முறைகேட்டுக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்திருந்த நிலையில், தற்போது அவருக்கு பதில், அவரது சகோதரர் சோமஷேகரா ரெட்டிக்கு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இவரும் சாதாரணமானவர் அல்ல. சகோதரர் விடுதலையாக ஜாமீன் பெற்றதில் முறைகேடு செய்ததாக வழக்குப் பதிவாகியுள்ளது.
இப்படியே, செவிலியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியக் குற்றச்சாட்டு இருக்கும் ரேணுகாச்சார்யா என பல கறைபடிந்த கரங்களை பாஜக தனது பட்டியலில் இணைத்து அவர்களுக்கும், மக்கள் பிரதிநிதியாகும் நல் வாய்ப்பை அளித்து அழகு பார்த்துள்ளது.