முகப்பு
இந்தியா

இதோடு மட்டும்தான் ஆதாரை இணைக்க மக்கள் விரும்புகிறார்கள், ஆனால் அரசு எதிர்க்கிறது

வங்கி, கேஸ், செல்போன் என எத்தனையோ விஷயங்களுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு வற்புறுத்தினாலும், அதையெல்லாம் விரும்பாத மக்கள், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க முழு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

Updated On : 27 ஏப்ரல், 2018 at 5:55 PM
பகிர்:

புது தில்லி: வங்கி, கேஸ், செல்போன் என எத்தனையோ விஷயங்களுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு வற்புறுத்தினாலும், அதையெல்லாம் விரும்பாத மக்கள், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க முழு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

தனிநபர் பயன்படுத்தும் செல்போன் எண், வங்கிக் கணக்கு, கேஸ் இணைப்புக்கெல்லாம் ஆதார் இணைப்பை அவசியமாக்கிய மத்திய அரசு, ஜனநாயக நாட்டின் மிக முக்கியமான அடையாள அட்டையான வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணிக்கு இதுவரை பச்சைக் கொடி காட்டவில்லை. அவ்வளவு ஏன் அது பற்றி இதுவரை ஒரு வார்த்தைக் கூட பேசத் தயாராக இல்லை.

அதில் இருந்தே ஜனநாயகத்தை வலிமையாக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசுக்கு உடன்பாடில்லை என்பது தெளிவாகிறது.

Advertisement

இது பற்றி பல்வேறு தரப்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க 80 சதவீத வாக்காளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் கள்ள ஓட்டு குறையும் என்றும் கருத்துக் கூறியுள்ளனர்.

இதில் 8 சதவீதம் பேர்தான் இதனை எதிர்த்துள்ளனர். 12 சதவீதம் பேர் கருத்துக் கூற மறுத்துள்ளனர்.

2018-19ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைந்துள்ள நிலையில், லோக்கல் சர்க்கல்ஸ் என்ற அமைப்பு, தேர்தல் தொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறது. 

முன்னதாக, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கூறுகையில், ஆதாரையும், வாக்காளர் அடையாள அட்டையையும் இணைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏன் என்றால், இரண்டுமே வெவ்வேறு காரணங்களுக்காகக் கொண்டு வரப்பட்டவை என்று கருத்துக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.