முகப்பு
இந்தியா

காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த இரு பயங்கரவாதிகள்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தின்போது பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார். 
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புல்வாமா மாவட்டத்தின் திராப்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு திங்கள்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ராணுவம், மாநில காவல்துறையின் அதிரடிப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) ஆகியவற்றைச் சேர்ந்த கூட்டுப் படையினர், அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது, வீட்டுக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த துப்பாக்கிச் சண்டையில், அகியூப் முஸ்தாக், சமீர் அகமது பட் ஆகிய இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல், பயங்கரவாதிகள் சுட்டதில் ஒரு அதிகாரி உள்பட ராணுவத்தினர் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொல்லப்பட்ட இரு பயங்கரவாதிகளும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் சமீர் கடந்த 2016-இல் இருந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். அரசியல் பிரமுகர்கள் கொலையிலும் அவருக்கு தொடர்புள்ளது.
முன்னதாக, பயங்கரவாதிகளை தப்பிக்க செய்யும் நோக்கில் அப்பகுதி இளைஞர்கள் திரண்டு பாதுகாப்புப் படையினரை நோக்கி கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களை விரட்ட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஷாஹித் அமகது என்ற 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 
இதனிடையே, அந்த வீட்டில் சோதனை மேற்கொண்ட பாதுகாப்புப் படையினர், ஏராளமான துப்பாக்கித் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர் என்றார் அந்த அதிகாரி.
 

முழு கட்டுரையைப் படிக்க →