முகப்பு
இந்தியா

கேரளாவுக்கு முதல்கட்டமாக ரூ.500 கோடி நிதி அறிவிப்பு: வெள்ள பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி நேரில் ஆய்வு 

கேரளாவுக்கு முதல்கட்டமாக ரூ.500 கோடி நிவாரண நிதி அறிவித்து பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:

கேரளத்தில் கனமழை காரணமாக தொடர்ந்து இக்கட்டான சூழல் நிலவுவதாகவும், 50,000 குடும்பங்களைச் சேர்ந்த 2.23 லட்சம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 324-ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில் மேற்கண்ட தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் உருக்குலைந்துள்ள கேரள மாநிலத்தைப் பார்வையிடுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரவு திருவனந்தபுரம் வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கேரள ஆளுநர் பி.சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அங்கிருந்து கொச்சி சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டரில் பயணம் செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சனிக்கிழமை ஆய்வு செய்ய இருந்தார். கனமழை காரணமாக இந்த ஆய்வு பணிகள் ரத்து செய்யப்பட்டன. 

பின்னர், வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் பி.சதாசிவம் உள்ளிட்டோருடன் நடைபெற்று வரும் ஆய்வுக் கூட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கலந்தாலோசித்தார். 

இந்நிலையில், முதல்கட்டமாக ரூ.500 கோடி நிவாரண நிதி அறிவித்து பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். மேலும், பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கி உத்தரவிட்டார்.

முன்னதாக, மத்திய அரசு தரப்பில் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.100 கோடி நிதி வழங்கி பிரதமர் மோடி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வானிலை சீரான நிலையில், வெள்ள பாதிப்புப் பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார். அவருடன் கேரள ஆளுநர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உடன் சென்றுள்ளனர்.

கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடியை பாரத ஸ்டேட் வங்கி வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கேரள மாநிலம் முழுவதிலும் எஸ்.பி.ஐ வங்கிக் கிளைகளில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான சேவைக் கட்டணங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →