கேரளாவின் திரிச்சூர் மாவட்டம் சாலக்குடிக்கு மீட்புப் பணிக்காக 32 மீனவர்கள் போலீஸாருடன் செல்கின்றனர்.
கேரள மாநிலம் கடந்த 100 ஆண்டுகளில் காணாத மிகப் பெரிய வெள்ள சேதத்தை கடந்த 10 நாட்களாக எதிர்கொண்டு வருகிறது. கேரள மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, மழையின் தீவிரமும் குறைந்ததால் மீட்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் துரிதப்படுத்தப்பட்டது.
இந்த வெள்ளத்தால் மூணாறு, ஆலுவா, கொச்சி, சாலக்குடி, செங்கணூர் என குறிப்பிட்ட பல இடங்கள் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்தன. இதில், சாலக்குடி பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு 32 மீனவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு போலீஸாருடன் சென்றுள்ளனர்.
நன்கு நீச்சல் அறிந்த நீச்சலில் நிபுணத்துவம் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் இந்த 32 இளம் மீனவர்கள் போலீஸாரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அஜ்ஜனூர், மீனப்பீஸ், கன்ஹன்காட் மற்றும் பஞ்சவி கடப்புரம் உள்ளிட்ட கடலோரப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஆவர். இவர்கள், நீச்சலில் மட்டும் இன்றி இயந்திர படகுகளையும் திறம்பட கையாளத் தெரிந்திருப்பவர்களாக இருப்பதால் கண்ணூர் தலைமை காவலர் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார். இந்த மீனவர்கள் போலீஸார் வாகனத்தில் சாலக்குடிக்கு சென்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.