இந்தியா

கேரள நிவாரணத்தில் பிரதமர் அரசியல் செய்கிறார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

DIN


பேரிடரால் சிதைந்து போன கேரளத்துக்கு உரிய நிவாரண நிதி வழங்காமல் பிரதமர் மோடி அரசியல் செய்து வருகிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. வெள்ளத்தில் மூழ்கியுள்ள அந்த மாநிலத்துக்கு தாராள மனதுடன் உதவ அவர் முன்வர வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
நூற்றாண்டில் இதுவரை இல்லாத அளவு பெய்த பெரு மழை காரணமாக கேரளம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இத்தகைய சூழலில், வெள்ள பாதிப்பை அண்மையில் பார்வையிட்ட பிரதமர் மோடி, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதல்கட்ட நிதியாக ரூ.500 கோடி அறிவித்தார். இதனை காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஜெய்வீர் 
ஷேர்கில் தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
பிரதமர் மோடி கேரள வெள்ள பாதிப்புக்காக ரூ.500 கோடி அறிவித்துள்ளார். இதுவரை ரூ.19,000 கோடி வரை மாநிலத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த இழப்புடன் ஒப்பிடும்போது பிரதமர் அறிவித்த தொகை மிகவும் சொற்பமானது. சுயவிளம்பரத்துக்காக ரூ.5,000 கோடி செலவிடுகிறார் மோடி. அவரது உடற்பயிற்சி விடியோ பதிவுக்காக ரூ.35 கோடி செலவிடப்பட்டது. பாஜகவுக்கு புதிய தலைமையகம் கட்ட ரூ.1,100 கோடி செலவு செய்யப்பட்டது.
இதற்கெல்லாம் இவ்வளவு செலவு செய்யும் பிரதமர் மோடி, கேரள விஷயத்தில் மட்டும் அரசியல் செய்கிறார். அந்த மாநில மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியிருக்கும் இந்தத் தருணத்தில்தான் பிரதமர், தனது தாராள குணத்தைக் காட்ட வேண்டும்.
அதைவிடுத்து மிகக் குறைந்த அளவிலான நிவாரண நிதியை ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்துக்கு முரணாக அவர் செயல்படுவதையே வெளிக்காட்டுகிறது என்றார் ஜெய்வீர் ஷேர்கில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT