இந்தியா

தற்கொலைக்கு சமம் எனத் தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்: மெஹபூபா முஃப்தி

DIN

பாஜகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமமானது எனத் தெரிந்தே அதை மேற்கொண்டதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்தார். வாஜ்பாயை போல பிரதமர் நரேந்திர மோடி செயல்படுவார் என்று நம்பியிருந்ததாகவும் அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில், பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் பாஜக ஆதரவை வாபஸ் பெற்றதால் அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது. கடந்த மாதம் சட்டப்பேரவையை ஆளுநர் கலைத்தார்.
இத்தகைய சூழலில்,மும்பையில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் மெஹபூபா முஃப்தி பேசியதாவது:
பாஜகவுடன் கூட்டணி அமைப்பது எங்கள் கட்சியை தற்கொலையில் தள்ளும் என எங்களுக்குத் தெரியும். ஆகவே அனைத்து விஷயங்களையும் நாங்கள் தள்ளி வைத்தோம். பிரிவினைவாத தலைவர்களுடனான பேச்சுவார்த்தையை ஊக்குவிப்பவர்களாக எங்கள் கட்சி பார்க்கப்பட்ட நிலையில், இந்த தருணத்துக்கு பொருத்தமானவராக மோடி இருப்பார் என நாங்கள் கருதினோம். வாஜ்பாய்க்கு இல்லாத பெரும்பான்மை பலம் மோடிக்கு இருப்பதால் அவர் பாகிஸ்தானிடமும், ஜம்மு-காஷ்மீர் மக்களுடனும் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவார் என நினைத்தோம். வாஜ்பாய் விட்டுச் சென்றதை மோடி தொடருவார் என நம்பினோம்.
வாஜ்பாய் பிரதமராகவும், எனது தந்தை முதல்வராகவும் இருந்த சமயத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒரே திசையில் பயணிப்பதாக கருத்து பரவியது. 2002-2005 வரையில் பொற்காலமாக இருந்தது.
பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் ஜம்மு-காஷ்மீர் மக்களின் பிரச்னைகளுக்கு மோடி தீர்வு காண்பார் என நினைத்தோம். இதனால் பிடிபி கட்சிக்கு முடிவுரை ஏற்பட்டாலும் பரவாயில்லை எனக் கருதினோம் என்றார் முஃப்தி.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு மெஹபூபா பதில் அளிக்கையில், ""பாஜகவுடன் கூட்டணி அமையும் என ஒருபோதும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அதைப் போலவே, தேவை ஏற்படுமெனில் இந்தக் கட்சிகளுடனும் கூட்டணி ஏற்படலாம்'' என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT