இந்தியா

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகளும், ஒரு ராணுவ வீரரும் சனிக்கிழமை உயிரிழந்தனர். துப்பாக்கிச் சண்டை  நடந்த இடத்தில் கூட்டத்தைக் கலைப்பதற்கு பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புல்வாமா மாவட்டத்தில் உள்ள சிர்னூ கிராமத்தில் ஓரிடத்தில் 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை அதிகாலை அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். 3 பயங்கரவாதிகளில் ஒருவர், உள்ளூரைச் சேர்ந்த ஜஹுர் அகமது தோக்கர் ஆவார். ராணுவத்தில் பணியாற்றிய இவர், பாரமுல்லா மாவட்டத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் தலைமறைவாகி, பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தார்.
ஜஹுர் அகமது தோக்கர், அங்கு பதுங்கியிருப்பதாகத் தகவல் வெளியானதை அடுத்து, அவரைப் பார்ப்பதற்காக, பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்களை கலைந்துபோகச் செய்வதில் பாதுகாப்புப் படையினருக்கு சிரமம் ஏற்பட்டது.
இதனிடையே, பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்களின் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். சுமார் 25 நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலில், ஜஹுர் அகமது உள்பட 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், பாதுகாப்புப் படையினரின் வாகனங்களின் மீது ஏறி நின்று, அவர்களுக்கு இடையூறு கொடுத்தனர். அவர்களை கலைந்து செல்லுமாறு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பிறகும் எந்தப் பலனும் இல்லை. இதையடுத்து,  அவர்களை கலைக்கும் நோக்கத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் ஒரு இளைஞரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனிடையே, பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 2 வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து,  பதற்றம் உருவாவதைத் தடுப்பதற்கு தெற்கு காஷ்மீரில் உள்ள 4 மாவட்டங்களில் செல்லிடப்பேசி இணையதளச் சேவை நிறுத்தப்பட்டது என்று அந்த அதிகாரி கூறினார்.
அரசியல் தலைவர்கள் கண்டனம்: புல்வாமாவில் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), தேசிய மாநாட்டுக் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிடிபி கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த 6 மாதங்களாகவே தெற்கு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்கின்றனர். பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக, எத்தனை விசாரணை நடத்தினாலும், 7 பேரின் உயிரை மீட்டுத் தர முடியாது. மாநிலத்தில் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆட்சியில் இதைத்தான் மக்கள் எதிர்பார்த்தார்களா? ஆளுநரின் நிர்வாகம், மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டது.
பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் இன்னும் எத்தனை இளைஞர்களை நாங்கள் இழப்பது? எந்தவொரு நாடும் தனது சொந்த நாட்டு மக்களைக் கொன்று போரில் வெற்றிபெற முடியாது. மாநிலத்தில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கு மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெஹபூபா முஃப்தி தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளைக் கொல்வதற்கு பாதுகாப்புப் படையினர் தவறான முறையைக் கையாண்டுள்ளனர். துப்பாக்கிச் சண்டை நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது புதிதல்ல. இருப்பினும், அவர்களை சமாளிப்பது எப்படி என்பது குறித்து இதுவரை பாதுகாப்புப் படையினர் கற்றுக் கொள்ளாதது ஏன்?
இதிலிருந்து, மாநிலத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கு ஆளுநர் தலைமையிலான நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. அவர், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுப்பது - பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது - இந்த இரு பணிகளை மட்டுமே செய்தால் போதுமானது. அவ்வாறின்றி, விளம்பரம் செய்வதால் மட்டுமே மாநிலத்தில் அமைதி திரும்பி விடாது என்று ஒமர் அப்துல்லா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சியின் தலைவருமான சஜத் லோன் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், "பயங்கரவாதிகளுடன் மோதுவதற்கு முன், அதனால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என முன்கூட்டியே கணிக்க வேண்டும்; ஒருவேளை, பொதுமக்களின் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுமெனில், அந்த தாக்குதல் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார் அவர்.

3 நாள் முழு அடைப்புக்கு அழைப்பு

இதனிடையே, புல்வாமாவில் பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து, பிரிவினைவாத இயக்கங்களின் கூட்டமைப்பு 3 நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. பிரிவினைவாதத் தலைவர்கள் சையது அலி ஷா கிலானி, மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக், முகமது யாசின் மாலிக் உள்ளிட்டோர் அந்த கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக, மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "காஷ்மீர் மக்களைக் கொல்வதற்கு முடிவெடுத்துள்ள இந்திய அரசு, அதை ராணுவம் மூலம் நிறைவேற்றி வருகிறது. பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாள்களுக்கு முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கிறோம். வரும் திங்கள்கிழமை, பதாமிபாக்கில் உள்ள ராணுவப் படை தலைமையகம் நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் செல்ல வேண்டும். அப்போது, தினமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்வதற்குப் பதிலாக, ஒரே நேரத்தில் எங்கள் அனைவரையும் கொன்று விடுங்கள் என்று இந்திய அரசிடம் நாம் கேட்க இருக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீநகரிலும், தெற்கு காஷ்மீரின் பல பகுதிகளிலும் சனிக்கிழமை மதியம், பல கடைகளின் உரிமையாளர்கள் தாமாக முன்
வந்து கடைகளை மூடி, தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT