மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூத்த தலைவர் கமல்நாத் பதவியேற்பு
மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் திங்களன்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்தியாமத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூத்த தலைவர் கமல்நாத் பதவியேற்பு
மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் திங்களன்று பதவியேற்றுக் கொண்டார்.
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் திங்களன்று பதவியேற்றுக் கொண்டார்.
அண்மையில் நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. அதையடுத்து மத்தியப் பிரதேச முதல்வராக யாரை நியமிக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பலகட்ட ஆலோசனைக்குப் பிறகு, கமல்நாத்தை முதல்வராக்க முடிவு செய்யப்பட்டது.
கட்சித் தலைமையின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க தங்களுக்கு அழைப்பு விடுக்குமாறு அந்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கமல்நாத் ஆளுநர் ஆனந்திபென் படேலை வெள்ளிக்கிழமை சந்தித்தார். பின்னர், மாநிலத்தில் ஆட்சி அமைக்க வருமாறு கமல்நாத்துக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பாக 9 முறை மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்நாத், கடந்த ஏப்ரல் மாதம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பணியாற்றினார்.
230 உறுப்பினர்கள் கொண்ட மத்தியப்பிரதேசத்தில் 114 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 109 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றன. 4 சுயேச்சை எம்எல்ஏக்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், சமாஜவாதியின் எம்எல்ஏ ஆகியோருடன் சேர்த்து 121 உறுப்பினர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கிறது.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் கமல்நாத்துக்கு கவர்னர் ஆனந்திபென் படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கமல்நாத்தின் அமைச்சரவை சகாக்கள் வேறு ஒரு நாளில் பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவே கவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர். அத்துடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் கலந்து கொண்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.