இந்தியா

பதவி விலகுமாறு உர்ஜித் படேலை மத்திய அரசு வற்புறுத்தவில்லை

DIN


ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் விலக வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு கோருவதாக எழுந்த பிரச்னை, வங்கிகளின் வாராக் கடன் பிரச்னைக்கு ரிசர்வ் வங்கியும் காரணம் என அருண் ஜேட்லி குற்றம்சாட்டியது ஆகியவை மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதை வெளிக்காட்டியது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் கடந்த 10-ஆம் தேதி திடீரென பதவி விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் கூறினாலும், மத்திய அரசுடன் இணக்கமான போக்கு இல்லை என்பதே அவரது விலகலுக்கு காரணம் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அருண் ஜேட்லி இது தொடர்பாக கூறியதாவது:
நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கியின் இருப்பில் இருந்து மத்திய அரசு ஒரு பைசாவைக் கூட பெறவில்லை. ரிசர்வ் வங்கியுடன் பல்வேறு பிரச்னைகள் குறித்து மத்திய அரசு விவாதித்துள்ளது. அது போன்ற விவாதங்கள் எப்போதும் தொடர்ந்து நடைபெறக் கூடியவைதான். இதற்காக ரிசர்வ் வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு மத்திய அரசு வற்புறுத்தியதாகக் கூறுவது தவறு. மத்திய அரசு அப்படி எவரையும் பதவி விலக வலியுறுத்தவில்லை என்றார்.
உர்ஜித் படேல் விலகலுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். ராஜிநாமாவுக்கு அடுத்த நாளிலேயே நடைபெற்ற இந்த நியமனம் பல கேள்விகளை எழுப்பியது. உர்ஜித்தின் ராஜிநாமா ஏற்கெனவே தெரிந்த காரணத்தால் மத்திய அரசு அடுத்த நபரை தேர்வு செய்து வைத்திருந்து உடனடியாக நியமித்தது என்று விமர்சனம் எழுந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT