பிரதமர் மோடி மீது கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளில், அவரது வெளிநாட்டுப் பயணங்களும், அதற்கான செலவுகளும் அடங்கும்.
இதுவரை பிரதமர் மோடி மேற்கொண்ட 48 உலகப் பயணங்களுக்காக அவர் செலவிட்ட மொத்தத் தொகை ரூ.2,021 கோடி மட்டுமே. இது என்ன அவ்வளவுப் பெரியத் தொகையா என்று கேட்க வேண்டாம். அது நாட்டின் பொருளாதார பிரச்னை.
சரி வாருங்கள் நாம் விஷயத்துக்கு வருவோம். அதாவது, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அதாவது 2009 - 2014ம் ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட 38 உலகப் பயணங்களுக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை ரூ.1,346 கோடியாகும். அதாவது 38 உலகப் பயணங்களுக்கு ரூ.1,346 செலவிட்டிருக்கும் போது, 48 பயணங்களுக்கு ரூ.2,021 கோடி என்பது கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒன்றாகத்தானே இருக்கிறது என்கிறார்கள் பாஜகவினர்.
முன்னதாக, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டதற்கு ரூ.2,021 கோடி செலவானதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் அளித்த பதிலில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 55 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அவற்றில் சில நாடுகளுக்கு பல்வேறு முறை சென்றார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை ரூ.93.76 கோடியும், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை ரூ.117.89 கோடியும் செலவானது. 2016-17 காலகட்டத்தில் ரூ.76.27 கோடியும், 2017-18 காலகட்டத்தில் ரூ.99.32 கோடியும் செலவானது.
ஏப்ரல் முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை சுமார் ரூ.42 கோடி செலவானது. இந்த காலகட்டத்தில் பிரதமர் மோடி சென்ற வெளிநாடுகளில் 10 நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அதிக அளவு அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டில் 30,930 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம் கோடி) அந்நிய நேரடி முதலீட்டின் மதிப்பாக இருந்தது. கடந்த ஆண்டில் அது 43,478 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (சுமார் ரூ.3 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது என்று வி.கே.சிங் குறிப்பிட்டிருந்தார்.
இந்த தகவலுடன், மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் கிடைத்த புள்ளி விவரங்களை ஒப்பிட்டதன் மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.