சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கை விசாரிக்கும் புதிய சிறப்பு விசாரணைக் குழுவில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி நவநீத் ராஜன் வாசனைச் சேர்க்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில்
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கை விசாரிக்கும் புதிய சிறப்பு விசாரணைக் குழுவில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி நவநீத் ராஜன் வாசனைச் சேர்க்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
சிறப்பு விசாரணைக் குழுவில் இப்போது இடம் பெற்றுள்ள இன்ஸ்பெக்டர் ஜெனரல் நிலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ராஜ்தீப் சிங்குக்கு பதிலாக, காவல் துறை இயக்குநர் ஜெனரலாக பணியாற்றியுள்ள என்.ஆர். வாசனை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. என்.ஆர். வாசன் 1980-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி ஆனவர். அவரை சிறப்பு விசாரணைக் குழுவில் சேர்க்கக் கோரும் மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த 1984-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, தலைநகர் தில்லி உள்பட பல்வேறு இடங்களில் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. காங்கிரஸ் தலைவர்கள் பலர் முன்னின்று நடத்தியதாகக் கூறப்படும் இந்தக் கலவரத்தில் தில்லியில் மட்டும் 2,733 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி வழங்க வேண்டுமென்று தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு உறுப்பினர் குர்லந்த் சிங் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணை விவரம் குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக மத்திய அரசு அளித்த பதிலில், தில்லியில் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக 250 வழக்குகள் சிறப்பு விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டன. அதில் 241 வழக்குகள் விசாரித்து முடித்து வைக்கப்பட்டுவிட்டது. 9 வழக்குகள் மட்டுமே விசாரணையில் உள்ளன. இதில் 2 வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்குகளை விசாரிக்க தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.என். திங்ரா, ஐபிஎஸ் அதிகாரி அபிஷேக் துலார், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராஜ்தீப் சிங் ஆகியோர் அடங்கிய புதிய சிறப்பு விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 11-ஆம் தேதி உத்தரவிட்டது.
இப்போது, இதில் ராஜ்தீப் சிங்குக்கு பதிலாக என்.ஆர்.வாசனை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.