முகப்பு
இந்தியா

அடுத்த 5 மாதங்களுக்குள் 5 செயற்கைக்கோள்களை ஏவத் திட்டம்: இஸ்ரோ தலைவர் கே.சிவன்

அடுத்த 5 மாதங்களில் புதிதாக 5 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

அடுத்த 5 மாதங்களில் புதிதாக 5 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் எடை குறைவான சிறிய ரக செயற்கைக் கோள்களையும், ராக்கெட்டுகளையும் வடிவமைக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரோ தலைவராக அண்மையில் புதிதாகப் பொறுப்பேற்ற சிவன், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
புதிய ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான ஆய்வுப் பணிகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் செயற்கைக்கோள் ஏவுதிறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றோம்.
ஆண்டொன்றுக்கு 15-இல் இருந்து 18 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாகச் செலுத்த வேண்டும் என்பது விஞ்ஞானிகள் அனைவரது விருப்பம். அதுவே எங்களது முதன்மையான இலக்கும்கூட. ஆனால், பல்வேறு காரணிகள் மற்றும் சூழல்களின் விளைவாக அந்த எண்ணிக்கையில் பாதியைத்தான் தற்போது செயல்படுத்த முடிகிறது.
தற்போதைய சூழலில் 4 டன் வரையிலான எடை கொண்ட செயற்கைக்கோள்களை இந்தியாவால் விண்ணில் செலுத்த முடியும். அதற்கு அதிகமான எடை கொண்டவை மட்டுமே பிற நாடுகளின் ஏவுதளம் வாயிலாக விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.
தற்போது அவற்றையும் இந்தியாவிலிருந்தே ஏவுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். 'எலெக்ட்ரிக் ப்ரோபெல்சன்' எனப்படும் மின்விசை உந்துசக்தி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைத்தால் 5.7 டன் எடையிலான செயற்கைக்கோளைக் கூட 4 டன் எடையில் தயாரிக்க இயலும்.
அதேபோன்று ராக்கெட்டுகளையும் சிறிய ரகத்தில் வடிவமைத்து செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டு வருகிறோம். அவையெல்லாம் தற்போது பரிசோதனை அடிப்படையில் உள்ளன. அந்த இலக்குகளை எட்டிப்பிடிக்க இன்னமும் சிறிது காலமாகும்.
சந்திராயன் - 2, ஜிசாட் - 6ஏ, ஜிஎஸ்எல்வி மார்க்-3, ஐஆர்என்எஸ்எஸ் - 1 ஆகிய செயற்கைக்கோள்கள் அடுத்தடுத்த மாதங்களில் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதேபோன்று ஜிசாட் - 11 செயற்கைக்கோளானது ஜூன் மாதத்தில் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்பட உள்ளது.
மொத்தத்தில் 5 மாதங்களில் 5 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணிகளில் இஸ்ரோ ஓய்வின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார் கே.சிவன்.
 

முழு கட்டுரையைப் படிக்க →