சோபியான் துப்பாக்கிச் சூடு: ராணுவ வீரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை
காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் ராணுவ வீரர்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
புது தில்லி: காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் ராணுவ வீரர்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சோபியான் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 27ம் தேதி ராணுவ வீரர்கள் மீது கல் வீச்சில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிந்த சம்பவத்தில் ராணுவ மேஜர் ஆதித்யா குமார் உள்ளிட்டோர் மீது காஷ்மீர் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆதித்யாவின் தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசௌத் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த மனு மீது மத்திய மற்றும் காஷ்மீர் மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராணுவ வீரர்கள் மீது நடத்தப்படும் கல்வீச்சு சம்பவங்களை தடுத்து நிறுத்த ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படுவது, சட்டத்தை தவறாக வழிநடத்துவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.