சங் பரிவார் அமைப்பினருடன் ராணுவத்தை ஒப்பிட்டு மோகன் பாகவத் பேசவில்லை
""சங் பரிவார் அமைப்பினருடன் ராணுவ வீரர்களை மோகன் பாகவத் ஒப்பிட்டுப் பேசவில்லை; அவரது கருத்து தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது'' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
""சங் பரிவார் அமைப்பினருடன் ராணுவ வீரர்களை மோகன் பாகவத் ஒப்பிட்டுப் பேசவில்லை; அவரது கருத்து தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது'' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் மன்மோகன் வைத்யா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பிகார் மாநிலம், முசாபர்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் மோகன் பாகவத் பேசியபோது பொது மக்களையும், சங் பரிவார் அமைப்பினரையும்தான் பாகவத் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். சங் பரிவார் அமைப்பினருடன் ராணுவத்தை அவர் ஒப்பிட்டுப் பேசவில்லை என்று அந்த அறிக்கையில் மன்மோகன் வைத்யா குறிப்பிட்டுள்ளார்.
திரிபுரா மாநிலம், அகர்தலாவில் பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் பேசியபோது, சங் பரிவார் அமைப்பினரின் தயார் நிலையைத்தான் மோகன் பாகவத் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்றார். ஆர்எஸ்எஸ் தொண்டர் என்ற முறையில், இந்திய ராணுவத்தின் வீரம், தியாகம் மீது சங் பரிவார் அமைப்புக்கு மிகுந்த மரியாதை இருப்பது தமக்கு தெரியும் என்றும் ராம் மாதவ் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி விமர்சனம்: இதனிடையே, மோகன் பாகவத்தின் பேச்சு, நாட்டு மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரை பதிவில் குறிப்பிட்டுள்ளார்.