இந்தியா

அடையாள ஆவணங்களைக் கேட்க அரசுக்கு உரிமை இல்லையா?: ஆதார் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி

DIN

சமூக நலத் திட்டங்கள் உரியவர்களிடம் சென்றடைகிறதா? என்பதைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் மக்களிடம் அடையாள ஆவணங்களைக் கேட்பதற்கு மத்திய அரசுக்கு உரிமை இல்லையா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பொருளாதாரச் சூழல் மற்றும் சமூக அடிப்படையில் ஒருவரை வகைப்படுத்தி நலத்திட்டங்களை அளிக்கும்போது, அவரது சுயவிவர ஆவணங்களைக் கோருவதில் மட்டும் தவறு என்ன இருக்க முடியும்? என்றும் கேட்டுள்ளது. ஆதார் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது இக்கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது. பல்வேறு சமூக நலத் திட்டங்களின் கீழ் உதவிகள் பெற ஆதாரைக் கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டது. இது மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும், தனிநபர் சுதந்திரத்துக்குப் புறம்பான நடவடிக்கை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக, பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்க அரசு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவற்றை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், அந்த விவகாரம் அரசியல் சாசன அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதிட்டதாவது:
அரசின் நலத் திட்டங்களைப் பெறும் நபர்கள், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள எத்தனையோ ஆவணங்கள் உள்ளன. இந்தியக் குடிமகன் என்பதை விடவா மிகப் பெரிய ஆவணம் ஒருவருக்கு தேவைப்படப் போகிறது? அதை விடுத்து அனைத்துக்கும் ஆதாரை கட்டாயமாக்கி இருப்பதை ஏற்க முடியாது. கணவனை இழந்து விதவையாக இருக்கும் ஒரு பெண் ஓய்வூதியம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த விவரங்களை ஆதாரில் குறிப்பிட்டு அடையாளப்படுத்திக் கொண்டுதான் ஓய்வூதியத்தை அப்பெண் பெற வேண்டுமா? மக்களின் விருப்பப்படி தகுந்த ஆவணங்களை அளிக்க வகை செய்ய வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: சமுதாயத்தில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், சூழல் ரீதியாகவும் வகைப்படுத்தப்பட்டு மக்களுக்கு உரிய பலன்களும், நலத் திட்டங்களும் அளிக்கப்படுகின்றன. அவ்வாறு ஒருவரது அடையாளங்கள் வகைப்படுத்தப்பட்டு உதவிகள் வழங்கும்போது, அதுதொடர்பான ஆவணங்களைக் கோருவதில் தவறு என்ன இருக்க முடியும்? மேலும், மக்களின் அடையாள ஆவணங்களைக் கேட்டறிவதற்கு ஓர் அரசுக்கு உரிமை இல்லையா? என்று கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு (பிப்.15) நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT