இந்தியா

ஆந்திர ஏரியில் இறந்து கிடந்த 5 பேர் அடையாளம் தெரிந்தது

DIN

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா ஏரியில் இறந்து கிடந்த 5 பேர் குறித்த அடையாளம் தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் சேலம் மாவட்டம் கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனித உரிமை சங்கத்தினர் கடப்பா மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஒண்டிமிட்டா ஏரியில் 5 சடலங்கள் மிதப்பதாக ஞாயிற்றுக்கிழமை காலை உள்ளூர் மக்கள் அளித்த தகவலின்பேரில் கடப்பா போலீஸார் அவற்றை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்களின் சட்டைப் பையில் இருந்த துண்டுச் சீட்டு, அவர்கள் வைத்திருந்த மஞ்சள் பை ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. 
உயிரிழந்தவர்கள் குறித்த முழு விவரம் தெரிந்தால் மட்டுமே பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். இதை அறிந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பலர், இறந்தவர்களை அடையாளம் காண கடப்பா ரிம்ஸ் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை காலை வந்தனர்.
இதில் இறந்தவர்கள் பற்றிய அடையாளம் தெரிய வந்தது. அதன்படி அவர்கள் 5 பேரும் சேலம் மாவட்டம் கருமந்துறையைச் சேர்ந்த முருகேசன் (42), ஜெயராஜ் (25), மற்றொரு முருகேசன் (42), கருப்பண்ணன் (23), சின்னப்பையன் (45) என்பது தெரிய வந்தது. இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் சடலங்களை அவர்களின் குடும்பத்தினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். இது குறித்து கடப்பா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
இதற்கிடையில் 5 தமிழர்கள் ஏரியில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து பணியில் உள்ள நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி மனித உரிமை சங்கத்தினர் கடப்பா மருத்துவமனை முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கொலை செய்யப்பட்டு ஏரியில் வீச்சு: ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்களின் சடலங்கள் மிதந்தது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏரியில் ஒரு ஆள் நிற்கும் அளவுக்கு அதாவது 5 அடி ஆழத்துக்கே தண்ணீர் உள்ளது. இறந்தவர்கள் அனைவரும் கிராமத்தினர் என்பதால் அவர்களுக்கு நீச்சல் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் 5 அடி ஆழம் மட்டுமே உள்ள ஏரியில் அவர்கள் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பில்லை. உள்ளூர் செம்மரக் கடத்தல்காரர்களுக்கும், இறந்தவர்களுக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக இவர்கள் 5 பேரும் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், செம்மரக் கட்டைகளை வெட்டி வரும் தமிழர்களிடமிருந்து வழிப்பறி செய்யும் உள்ளூர் கும்பலின் செயலாகவும் இது இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 
மேலும், திருப்பதியில் 20 தமிழர்கள் வனத்துறை, போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், ஆந்திர போலீஸார் அவர்களை என்கவுன்ட்டர் செய்யாமல் அடித்துக் கொலை செய்து ஏரியில் வீசினார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 
எனவே இந்த சம்பவம் குறித்து முழு அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இறந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT