மேற்கு வங்க பேரவை: காங்கிரஸ், இடதுசாரி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
மேற்கு வங்கத்தில் செய்தியாளர்கள் ஹிந்துத்துவ அமைப்பால் தாக்கப்பட்ட விவகாரத்தை அந்த மாநில சட்டப் பேரவையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் வியாழக்கிழமை
மேற்கு வங்கத்தில் செய்தியாளர்கள் ஹிந்துத்துவ அமைப்பால் தாக்கப்பட்ட விவகாரத்தை அந்த மாநில சட்டப் பேரவையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் வியாழக்கிழமை எழுப்பினர். இதுதொடர்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அவை அலுவல்களைப் புறக்கணித்து விட்டு அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் வேறு மதங்களைச் சேர்ந்த 14 குடும்பத்தினர் ஹிந்து மதத்துக்கு மாறும் நிகழ்ச்சி கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. ஹிந்து சன்ஹதி மன்சா என்ற அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் பலர் சென்றிருந்தனர். அப்போது மதம் மாறிய குடும்பத்தினரிடம் அவர்கள் பேட்டி கண்டதாகத் தெரிகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்களைத் தாக்கியதாகச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டப் பேரவை வியாழக்கிழமை கூடியவுடன் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் பேசினர். வழக்கமான அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் அவை அலுவல்களைப் புறக்கணித்து விட்டு காங்கிரஸ், இடதுசாரி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டம் - ஒழுங்கையும், ஊடகவியலாளர்களையும் பாதுகாக்க மாநில காவல் துறை தவறிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.