'உ.பி. மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக உருவெடுக்கும்'
நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் திறன் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு இருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் திறன் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு இருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் 2 நாள்கள் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இதில் நிறைவு உரையாற்றி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
முதலீட்டாளர்கள் உத்தரப் பிரதேசம் மீது அதிக ஆர்வம் காட்டுவதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன. இங்கு பணியாளர்கள் அதிக அளவில் உள்ளனர். அதே நேரத்தில் மிகஅதிக அளவில் நுகர்வோரும் இருக்கின்றனர். நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் சக்தி உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு உள்ளது. புதிய தொழில் தொடங்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் உத்தரப் பிரதேச மாநில அரசு புதிய கொள்கையை வடிவமைத்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பொருளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விளைவிக்கும் திட்டத்தை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அமல்படுத்தியுள்ளது பாராட்டத்தக்க முயற்சி. மாநிலத்தில் மனித வளத்தை மேம்படுத்தும் நோக்கில், பட்ஜெட்டில் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கான்பூர் ஐஐடி, லக்னெள ஐஐஎம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம் என சிறந்த கல்வி நிலையங்கள் இங்கு உள்ளன. மாநிலத்தின் வளர்ச்சியில் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு முக்கியப் பங்கு வகிக்கும். இதனை வெற்றிகரமாக நடத்திய மாநில அரசுக்கு வாழ்த்துகள் என்றார் அவர்.
காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:
உத்தரப் பிரதேசத்தின் ரே பரேலியில் (சோனியா காந்தியின் தொகுதி) ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் முந்தைய மத்திய அரசு மிகவும் அலட்சியமாக இருந்தது. இத்தொழிற்சாலையை 5,000 பெட்டிகள் தயாரிக்கும் திறனுடையதாக மாற்ற நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
2009-14-ஆம் ஆண்டு வரை ரூ.5,550 கோடி உத்தரப் பிரதேசத்தில் முதலீடாக வந்தது. 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு உத்தரப் பிரதேசத்துக்கு இதுவரை ரூ.26,390 கோடி முதலீடு வந்துள்ளது. மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு சட்டம்-ஒழுங்கு மேம்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பாரபட்சமற்ற நடவடிக்கைதான் இதற்கு காரணம் என்றார் பியூஷ் கோயல்.