முகப்பு
இந்தியா

லவ் ஜிகாத் வழக்கு: தனிநபர் திருமணம் குறித்து என்ஐஏ விசாரிக்க முடியாது- உச்ச நீதிமன்றம் கருத்து

 லவ் ஜிகாத் தொடர்பாக என்ஐஏ தொடர்ந்து விசாரிக்கலாம். ஆனால், ஒரு தனி நபரின் திருமண நிலை குறித்து விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துக் கூறியுள்ளனர்.

Updated On : 23 ஜனவரி, 2018 at 12:49 PM
பகிர்:


புது தில்லி:  லவ் ஜிகாத் தொடர்பாக என்ஐஏ தொடர்ந்து விசாரிக்கலாம். ஆனால், ஒரு தனி நபரின் திருமண நிலை குறித்து விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துக் கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த லவ் ஜிகாத் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரணை குறித்து என்ஐஏ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதனை கேட்ட நீதிபதிகள், லவ் ஜிகாத் தொடர்பாக நீங்கள் வழக்கம் போல விசாரணை செய்யலாம். சந்தேகிக்கும் நபர்களை கைதும் செய்யலாம். அந்த விசாரணையில் தலையிடவில்லை. ஆனால், அவர்களது திருமண நிலை குறித்து உங்களால் விசாரிக்க முடியாது என்று கருத்துக் கூறியுள்ளனர்.

Advertisement

வழக்கில் தொடர்புடைய ஹாதியா, நீதிமன்றத்தில் ஆஜராகி, தனது சொந்த விருப்பப்படியே ஷஃபீன் ஜஹானை திருமணம் செய்து கொண்டிருப்பதாகக் கூறியிருந்த நிலையில், "மேஜரான ஒரு பெண், தனது கணவரை தேர்வு செய்யும் உரிமை பெற்றுள்ளார்" என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சம்பவத்தின் பின்னணி: 
வைக்கம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது ஹிந்துப் பெண், ஷஃபீன் ஜஹான் என்ற முஸ்லிம் இளைஞரை மதம் மாறி திருமணம் செய்து கொண்டார். மேலும், தனது பெயரை ஹாடியா என்று மாற்றிக் கொண்டார். இந்நிலையில், தனது மகளை மூளைச்சலவை செய்து, மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, அந்தப் பெண்ணின் தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அந்தத் திருமணம் செல்லாது என்று அறிவித்தது. அதை எதிர்த்து, அந்தப் பெண்ணின் கணவர் ஜஹான், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்தப் பெண்ணின் ஒப்புதலின்படியே திருமணம் நடைபெற்றுள்ளதா என்பதை அறிய, தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து என்ஐஏ விசாரணைக்கு தடை கோரி, அந்தப் பெண்ணின் கணவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த விவகாரத்தை விசாரித்த என்ஐஏ அமைப்பு, அந்தப் பெண்ணை, ஜஹான் மூளைச்சலவை செய்து, சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹாடியா, தன் விருப்பப்படியே திருமணம் நடைபெற்றதாகக் கூறினார். அவர் தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், அவர் தமிழகத்தில், தனது கல்வியை தொடர அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.